
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் 3வது முறையாக சசிகலா தரப்பினர் 47,151 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இதில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு அணிகளாக உள்ளன.
இரு அணிகளும் கட்சியின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற முனைப்போடு செயல்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலின்போது, இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு, எந்த அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவர்களுக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே சசிகலா தரப்பில், இரட்டை இலை சின்னத்தை மீட்க 20 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 1,50,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா அணி சார்பில் 47,151 பிரமாண பத்திரங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.