
அவிநாசிதான் சபாநாயகர் தனபாலின் சொந்த தொகுதி. அங்கே ஏராளமான பகுதிகளில் குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து மாமாங்கம் ஆகிவிட்டது. குடிநீர் குழாய்களை உள்வாடகைக்கு விட்டு வருவாய் பார்க்கலாம் எனுமளவுக்கு நிலைமை காய்ந்து கிடக்கிறது.
சபாநாயகர் அவிநாசி செல்லும் போதெல்லாம் மக்கள் முற்றுகையை சந்திக்கிறார். ஒரு எம்.எல்.ஏ.வாக அவர்களை சமாளிக்க முடியாமல் பாதுகாவல் போலீஸின் துணையுடன் காரிலேறி பறக்கிறார்.
அதே தனபால் இன்று சட்டசபையில் எதிர்கட்சிகளை எவ்வளவு சாதுர்யமாக சமாளித்து வெளியேற்றி, ஆளுங்கட்சி சார்ந்த சட்டசபை மாண்பை காப்பாற்றியிருக்கிறார் பாருங்கள்.
இரண்டு நாட்களாக தேசத்தையே அதிர்ச்சியோடு தமிழகம் நோக்கி திரும்ப வைத்திருக்கிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சரவணன் மற்றும் கனகராஜ் இருவரும் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிகள், தங்கம் என்று பேரம் பேசப்பட்ட, பரிவர்த்தனை நடத்தப்பட்ட விவகாரம்.
இவ்வளவு முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டி பேச எழுகிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால் அதற்கு அனுமதி வழங்காமல், ’தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வந்த தகவலை வைத்துக் கொண்டு சபையில் விவாதிக்க முடியாது!” என்கிறார் சபாநாயகர். பின் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் பணியை அமைச்சர் வீரமணி செய்கிறார்.
அதன் பின்னும் எதிர்க்கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.க்களும் அந்த கூவத்தூர் குதிரை பேர விவகாரத்துக்கு விவாதம் வேண்டி குரல் கொடுக்கிறார்கள். உடனே சபாநாயகர் ‘இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. கோர்ட்டில் இருக்கும் பிரச்னைகளை இந்த சபையில் விவாதிப்பதில்லை என்பதை மரபாக வைத்திருக்கிறோம்.” என்று சொல்கிறார். அதை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் சில வலுவான எதிர்கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக வைத்து மன்றாடுகின்றனர்.
உடனே பாய்கிறது ஒழுங்கு நடவடிக்கை. ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியேற்றப்படுகின்றனர். பேரவையின் முதல்நாள் அலுவல் கிட்டத்தட்ட இனிதே முடிகிறது.
இந்த இடத்தில் தான் சில கேள்விகளை முன்வைக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் ‘’மீடியாக்களில் வந்த விஷயங்களை எடுத்து வைத்து சட்டசபையில் அ.தி.மு.க. பிரச்னையே செய்ததில்லையா? 2ஜி விவகாரம் கூட கோர்ட்டில்தான் இருக்கிறது. கலைஞர் டி.வி.க்கு பணம் வந்த விவகாரமும் கோர்ட்டில்தான் இருக்கிறது, தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கும் கூட நீதிமன்றத்தில் இருந்தது. இவை எதையும் மன்றத்தில் விவாதித்ததில்லையா அ.தி.மு.க?
அ.தி.மு.க. ஆளும் நிலையில் இருந்த போதும் சரி, எதிர் அணியில் இருந்த போதும் சரி மீடியாக்களில் பற்றியெரிந்த தி.மு.க.வுக்கு எதிரான விஷயங்கள் எவ்வளவையோ எடுத்து வைத்து பிரித்து மேய்ந்திருக்கிறார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தபோதும் அவர்கள் விட்டு வைத்ததில்லை. ஆனால் இன்று சபாநாயகர் இதையெல்லாம் மறுத்து எதிர்க்கட்சிகளை அடக்கியிருக்கிறார், வெளியேற்றி இருக்கிறார்.
உண்மையான தீரம் இருந்திருந்தால் எடப்பாடி மற்றும் பன்னீர் அணியினர் இந்த விவகாரத்தை பொது விவாதமாக்கி பதில் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து சபாநாயகரின் அதிகார இருக்கைக்கு பின்னே எடப்பாடி அணி பதுங்குவதென்பது அவலம்.
அப்படியானால் தனபால் சபாநாயகரா? சமாளிப்பு நாயகரா?” என்று கேட்டிருக்கிறார்கள்.
அடுத்த முறை அவிநாசி செல்லும்போதாவது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் தனபால் ஐயா!!