
தன் வீட்டில் வேலை செய்த பெண்ணை தாக்கியது, போலி ஆவணம் தயாரித்து, ஆள்கடத்தல் ஆகியவை தொடர்பான வழக்கில், சசிகலா உள்பட 3 பேருக்கு, ஜகோர்ட் மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதிமுக சார்பில், ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா புஷ்பா. கடந்த ஆண்டு போயஸ் கார்டன் சென்ற சசிகலா புஷ்பாவை, ஜெயலலிதா தாக்கியதாகவும், தன்னை எம்பி பதவியை ராஜினாமா செய்யும்படி மிரட்டியதாகவும் புகார் கூறினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வேலை செய்த பெண் கொடுத்த புகாரின்படி திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சசிகலா புஷ்பா உள்பட 3 பேர் மீது ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தது ஆகிய புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சசிகலாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சசிகலா புஷ்பா உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.