திமுக அரசு இதை செய்தே ஆகணும்... கோரிக்கை விடுத்த சசிகலா.. என்னவா இருக்கும் ?

By Raghupati RFirst Published Jan 2, 2022, 1:26 PM IST
Highlights

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திட்டத்தை வரும் 4 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு, வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரும்பு விவசாயிகளிடம் இருந்து, பொங்கல் சிறப்பு தொகுப்பாக, செங்கரும்பு கொள்முதல் செய்வதில், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்சமயம் அரியலூர், விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பத்தாயிரம் ஏக்கருக்கும் அதிகமாக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. 

விவசாயிகளுக்கு இதன் மூலம் கணிசமான அளவில் வருவாய் பெற்று தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.அதே சமயம், விவசாயிகளிடமிருந்து இக்கரும்பை கொள்முதல் செய்யும் போது இடைத்தரகர்கள் தலையிட்டு, கரும்பிற்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை பெற முடியாமல் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

தமிழக அரசு ஒரு கட்டு கரும்பிற்கு ரூபாய் 400 வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலைகளில் நின்று போராடி வருகின்றனர். விவசாயிகள் ஏற்கனவே மழை, வெள்ளம் மற்றும் இடுபொருட்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் இந்த கரும்பை சாகுபடி செய்துள்ளனர். 

ஆகையால் கடந்த ஆண்டை விட அதிகமான கொள்முதல் விலை கிடைத்தால் தான் தங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையில் பரிதவிக்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்கள் விளைவித்த கரும்பை, இடைத்தரகர்கள் இல்லாமல், அரசே நேரடியாக கொள்முதல் செய்து, தங்களுக்கு சேர வேண்டிய தொகையையும் அரசே நேரடியாக தங்களது வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

இவற்றையெல்லாம், தமிழக அரசு கவனத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து செங்கரும்பிற்கான கொள்முதல் விலையை உயர்த்தியும், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்தும் அதற்கான தொகையை விவசாயிகளுடைய வங்கி கணக்கில் அரசே நேரடியாக சேர்க்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையில் கூறியிருக்கிறார் சசிகலா.

click me!