Hanuman Jayanti: திமுக ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Jan 2, 2022, 1:25 PM IST
Highlights

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கியதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன என  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

அனுமன் ஜெயந்தியையொட்டி உலக புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்பட்டன. கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆய்வுக்காக நாமக்கல் வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆஞ்சிநேயர் கோவிலுக்கு சென்று வடைமாலை அணிவித்து பயபக்தியுடன் தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் குமார் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கியதாக தெரிவித்தார். அர்ச்சகர், வேதபாராயணம், இசை உள்ளிட்ட பயிற்சி பள்ளிகளை அதிக அளவில் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு செய்ய வேண்டிய கோவில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. 

திமுக தலைமையிலான இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்மீகவாதிகளை அரவணைத்து செல்கிறது. தமிழக அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது. இதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

click me!