இது மக்களை ஏமாற்றுகின்ற செயல்... திமுகவை கடுமையாக விளாசிய சசிகலா!!

By Narendran S  |  First Published Apr 24, 2023, 8:43 PM IST

திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது வழங்க அனுமதி அளிப்பது மிகவும் அபாயகரமானது என சசிகலா தெரிவித்துள்ளார். 


திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது வழங்க அனுமதி அளிப்பது மிகவும் அபாயகரமானது என சசிகலா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தமிழக மக்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. புரட்சித்தலைவி அம்மா பூரண மது விலக்கை கொண்டு வரும் முயற்சியில் முதலில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் திமுகவினரோ புதியதாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்து வருகின்றனர். மேலும் இன்றைய ஆட்சியாளர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தோடு தமிழகம் முழுவதும் தனி நபர்கள் முறைகேடாக மதுபானங்களை விற்று வருவது குறித்து தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் நாள்தோறும் வருகின்றன.

இதையும் படிங்க: யாருக்குக் கல்யாணம்? ராகுல் படத்துடன் திருமண அழைப்பிதழ் கொடுத்த காங்கிரஸ் தலைவர்!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக தமிழ்நாட்டில் சமூக சீர்கேடுகள் அதிகரித்து சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டது. இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் தற்போது திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மது வழங்க அனுமதி அளிப்பது மிகவும் அபாயகரமானது. திமுகவினர் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு திராவிட கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் விரோத அறிவிப்புகளை நாள்தோறும் செய்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தமிழ்நாடு சட்டசபையில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்து விட்டு தற்போது இது போன்று அரசாணை வெளியிடுவது மக்களை ஏமாற்றுகின்ற செயல். மேலும், திருமண மண்டபங்களில் மது வழங்க அனுமதி அளித்து அரசாணையை வெளியிட்டுவிட்டு, துறை அமைச்சரே பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதனை மறைத்து திருமண மண்டபங்களில் மது வழங்க அனுமதி அளிக்கவில்லை என்று பொய்யான கருத்தை சொல்லி மக்களை ஏமாற்றும் விதமாக பேசுகிறார். இதுபோன்று திமுகவினர் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ்-ன் வழக்கு... ஜூன்.8 தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!!

அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கையாக 12 மணி நேர வேலை மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றியது. தற்போது அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இந்த மசோதாவை திரும்ப பெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, திமுக தலைமையிலான அரசு எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் முன்கூட்டியே நன்றாக ஆராய்ந்து எடுக்கின்றனரா? என்பது தெரியவில்லை. எனவே, இது போன்று மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என இந்த ஆட்சியாளர்களை அறிவுறுத்துகிறேன். மேலும் மக்களை முற்றிலும் பாதிக்கின்ற அறிவிப்பான திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் மதுவை வழங்கலாம் என்ற சிறப்பு அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!