
தொடர் தோல்வி காரணமாக அதிமுக- அமமுக இணைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மத்தியில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை ஓ.ராஜாவை கட்சியை விட்டு நீக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் சசிகலா ஆதரவு விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றனர். தேனி மாட்ட அதிமுக சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி கூறுகையில் , சசிகலாவை சந்தித்த ஓ.ராஜாவை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் சசிகலாவை இணைக்க வேண்டும் என தீர்மானம் போட்ட தேனி மாவட்ட செயலாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென கேள்வி எழுப்பினார். மேலும் தேனி மாவட்டம் சார்பாக நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இந்த தீர்மானத்தை ஏற்று கொள்கிறோம் அல்லது இல்லையென அதிமுக தொண்டர்களுக்கு தலைமை கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது தான் எந்த நிலையில் அதிமுக உள்ளது என்பது தெரியவரும் என கூறினார். எனவே இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே வேற்றுமை இல்லையென்று தெரிவித்தவர், இரண்டு பேரும் இணைந்து தான் டிராமா போடுவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே அவர்களை அதிமுகவினர் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களின் அந்த குரல் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த குரல் எதிரொலிக்காதது தேனி மாவட்ட அதிமுகவை மட்டுமல்ல ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதிமுகவில் சசிகலா என்ட்ரி கேள்வி குறியாக மாறிவிட்டது. இதற்கு உதாரமாகத்தான் சசிகலா தென் மாவட்டங்களில் சென்ற சுற்றுபயணத்தில் அதிக அளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டம் இல்லாதது சசிகாலவையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.