
நடிகர் சூர்யா நல்ல கலைஞனாக இருந்திருந்தால் ஜெய் பீம் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருப்பார், ஆனால் அவர் அப்படி கேட்கவில்லை என பாமக இளைஞரணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நடிகர் சூர்யா நினைத்திருந்தால் பிரச்சினையை ஒரேநாளில் முடித்திருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் பற்றி எரிந்த ஜெய்பீம் விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில் அன்புமணி ராமதாசின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியான படம் ஜெய்பீம். அதில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். பழங்குடியினர் சமூக மக்கள் காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாவதை மையமாக வைத்து அத்திரைப்படம் எடுக்கப்பட்டது. அதில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தழுவி அப்படம் உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தந்த வழக்கறிஞர் (நீதியரசர்) சந்துருவின் கதாபாத்திரத்தை ஏற்று சூர்யா நடித்திருந்தார். இந்தப்படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட உதவி ஆய்வாளரின் உண்மை பெயரான அந்தோணிசாமி என்பதை மறைத்து, அந்த கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
பாமகவின் பிரதான அடையாளமான அக்னி கலசம் குருமூர்த்தியின் வீட்டில் இருப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. அதாவது அந்தக் கொடூர சப்-இன்ஸ்பெக்டர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை போல அந்த காட்சி இருந்தது. இதனால் கொந்தளிப்பு அடைந்த பாமக மற்றும் பல்வேறு வன்னிய அமைப்புகள் அந்த காட்சியில் உள்ள அக்னி சட்டி காலண்டர் உடனே நீக்கப்பட வேண்டும், வன்னியர்க ளுக்கான குறியீடுகள் அடையாளங்கள் அப்படத்தில் இருக்கக்கூடாது எனக்கூறி போராட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சூர்யாவை பல்வேறு கேள்விகளை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதற்கு நடிகர் சூர்யாவும் பதில் அறிக்கை எழுதினார். அது மேலும் பிரச்சினை அதிகப்படுத்தியது, ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் அறிவித்தார். இது பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது.
இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் இல்லத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாமகவினர் போராட்டம் வன்முறையை தூண்டுகிறது என கம்யூனிஸ்டுகள் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என பாமகவினர் தீவிரம் காட்டி வந்தனர். இதையடுத்து அப்படத்தின் இயக்குனர் தா. செ ஞானவேல் இப்படத்தில் காட்சிகளுக்கும் சூர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எந்த உள்நோக்கத்துடன் அக்னிச்சட்டி பயன்படுத்தவில்லை. ஒருவகையில் இது பாமக, வன்னிய சமூகத்தினரை காயப்படுத்தியிருந்தால் அதற்குத் தான் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அப்போது அவரிடம் ஜெய்பீம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், உண்மையிலேயே நடகர் சூர்யா நேர்மையான கலைஞராக இருந்தால் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் செய்யவில்லை என கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:- ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவை அனுக எவ்வளவோ முயற்சி செய்தோம், பிறகு எனது சார்பிலும் அவர்கள் சார்பிலும் பேசப்பட்டது, இது பிரச்சனையை அதிகப்படுத்தியுள்ளது. யாரைப் பற்றியும் பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே தவிர, எந்த சமுதாயத்தைப் பற்றியும் இழிவாக சொல்லக்கூடாது. அக்கினி கலசம் என்பது வன்னிய சமுதாயத்தின் புனிதமான அடையாளமாக கருதப்படுகிறது. இதேபோல அடையாளங்கள் ஒவ்வொரு சமுதாயத்திற்கும், ஒவ்வொரு மதத்திற்கும் உள்ளது.
ஒவ்வொரு இனத்திற்கு உள்ளது. ஆனால் அதை திரைப்படத்தில் தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்கள், இது குறித்து நல்ல முறையில் சூர்யாவுக்கு எடுத்துக் கூறினோம், ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. அதன் பிறகுதான் நான் கடிதம் எழுதினேன், அந்தக் கடிதத்திற்கு அவர் காட்டமாக பதில் எழுதினார். ஆனால் அவர் ஒரு நேர்மையான கலைஞனாக இருந்தால் யாராவது தங்களை புண்படுத்துகிறது எனக் கூறினால், அதை அவர்கள் தவிர்த்திருப்பார்கள். உண்மையான, நேர்மையான நடிகராகவும் கலைஞராக இருந்திருந்தால் ஒரு சமுதாயம் புண்படுகிறது என்றால் உடனே அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டிருப்பார்கள், ஆனால் அது நடக்கவில்லை என்று சூர்யா நினைத்திருந்தால் ஒரே நாளில் அந்த பிரச்சினை முடித்து இருக்கலாம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகே அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள்.
எங்களுக்கு சூர்யாவுடன் சண்டை போடுவது தான் வேலை அல்ல, தமிழ் நாட்டை திருத்த வேண்டும்ர மதுவை ஒழிக்க வேண்டும் என பல வேலைகள் எங்களுக்கு இருக்கிறது என அவர் கூறினார். இதேபோல நடிகர் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் என்று கூறியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, உடனடியாக நான் அந்த மாவட்ட செயலாளர்களை அழைத்து அறிவுரை கூறினேன். அவர் உணர்வுபூர்வமாக நான் கூறி விட்டேன் என தெரிவித்தார். பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது என எச்சரித்தேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.