சசிகலா ரீ-என்ட்ரி...!! ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக அவசர ஆலோசனை

By manimegalai aFirst Published Mar 3, 2022, 1:21 PM IST
Highlights

சசிகலா இனைப்பு  தொடர்பாக அதிமுகவில் குரல் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

ஜெயலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தையும் அதிமுக இழந்துள்ளது.  இதனை தொடர்ந்து  நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. வாக்கு சதவீதத்தில் மோசமான நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவின்  அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் வாக்குகள் இரண்டாக பிளவு பட்டதால் தான் பெரிய அளவிலான தோல்வி ஏற்பட்டதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இந்தநிலையில் தேனியில் மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம்  கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தநிலையில் சேலம் நெடுஞ்சாலையில் நகர் இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநில  கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். . இந்த ஆலோசனையில் தேனி மாவட்டத்தில் அதுவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதே போல தேனியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தென்காசி மாவட்ட வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனையில் முக்கிய அம்சமாக தேனி மாவட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களின் நிலை குறித்து ஆலோசி்க்கப்பட்டு வருகிறது. மேலும்   அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு  வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சசிகலா இணைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், அதிமுக தோல்விக்கு சசிகலா இல்லாததுதான் காரணம் என இப்போது கூறுவதை ஏற்றக்கொள்ள முடியாது என தெரிவித்தார். பழைய எஜமானர்களுக்கு காலை கழுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த தீர்மானம் போடப்பட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமையெனவும்  அவர் கூறினார். அதிமுக  தரப்பில் இருந்து பலரும் பல வித  கருத்து கூறிவரும் நிலையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கருத்து தெரிவிக்காமல் மெளனமாக இருப்பது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!