
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்பி சசிகலா புஷ்பா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
இதையொட்டி நேற்று காலை அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக, அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதாக தேர்வு செய்தனர். பின்னர், சசிகலாவே முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி தீர்மானமும் நிறைவேற்றி, அவரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர்.
இதையடுத்து, வரும் 9ம் தேதி சசிகலாவுக்கு, தமிழக கவர்னர் (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர், பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கும், முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சட்டமன்ற அதிமுக தலைவராகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் அடிப்படையில் எந்த கட்சி பணியும் செய்தது இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், தற்காலிக முதல்வராக அவர் நியமிக்கப்படவில்லை.
தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்றால், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். இதனால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிடும். எனவே பிரதமர் மற்றும் கவர்னர் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில், எவ்விரத விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா முன்னதாகவே குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார் என்பத குறிப்பிடத்தக்கது.