
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் தனக்கு இடம் கொடுத்திருந்தார் என்றும், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா, அக்கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டதாக அறிவித்தார். ஆனால் சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக நாடாளுமன்ற செயலருக்கு அதிமுக கடிதம் அனுப்பவில்லை.
இதனையடுத்து அவர் தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சசிகலா புஷ்பா, ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோதும் அவருடன் சசிகலா புஷ்பா இணையவில்லை.
ஆனால் கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு கோஷ்டியிலும் இணையாமல் டெல்லிக்கும் தமிழகத்துக்குமாக மாறி,மாறி பறந்து கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சசிகலா புஷ்பா ,ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எந்த ஒரு தலைவருமே இல்லை என தெரிவித்தார்.
அதிமுக தற்போது 4 கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது என்றும், தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம், கட்சி ஆகியவற்றுக்கு உரிமை கோரி 4 கோஷ்டியும் மனுத்தாக்கல் செய்திருக்கிறது என குறிப்பிட்டார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு அடுத்த நிலையில் தனக்கு இடம் கொடுத்திருந்தார் என குறிப்பிட்ட சசிகலா புஷ்பா, இன்று அதிமுகவில் மூத்த நிர்வாகிகளாக இருப்பவர்கள், மூத்த அமைச்சர்கள் என பலர் மீதான புகார்கள் குறித்து தன்னைத்தான் விசாரிக்க சொல்லியிருந்தார் என்றும் தெரிவித்தார்.