
டி.டி.வி.தினகனை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், அத்தொகுதி வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணமும், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தினகரன் தனது ஆதரவாளர்கள் மூலம் இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு வாக்களர்களுக்கு வழங்கியிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சட்டவிரோத செயல்களை செய்ததற்காக தினகரன் தரப்பினர் மீது 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்,
ஆனால் வெட்ட வெளிச்சமாக இத்தனை பிரச்சனைகள் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனை ஏன் இதுவரை தகுதி நீக்கம் செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளி மாவட்டங்களில் இருந்து தொகுதிக்குள் ஏராளமானோர் இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை மிரட்டி வருவதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் தினகரனுக்கு ஆதரவாக நடந்த கொள்வதாகவும், அவர்களை நம்பாமல், சிறப்பு காவல் படையை தொகுதிக்குள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்கு பதிவு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த தினகரன் தரப்பினர் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
டி.டி.வி.தினகரனின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் பொது மக்கள் சட்டப்பேரவையின் மாண்புகளை நன்கு புரிந்துகொள்ள முடியும் என சசிகலா புஷ்பா, தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.