
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்….சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு….
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்கள் கழித்து அவர் பூரண குணமடைந்து விட்டார் என்று அப்பலோ இயக்குனர் பிரதாப் ரெட்டியும் அறிவித்தார். ஆனால் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை பெற்றதற்கான எந்தஒரு புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. நடிகை கௌதமியும் இது குறித்து விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே அதிமுக வில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி, முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.