அதிமுகவில்தான் இல்லை… அமமுகவிலும் இடமில்லையா? போஸ்டரில் புறக்கணிக்கப்பட்ட சசிகலா!!

Published : Jan 30, 2022, 05:11 PM IST
அதிமுகவில்தான் இல்லை… அமமுகவிலும் இடமில்லையா? போஸ்டரில் புறக்கணிக்கப்பட்ட சசிகலா!!

சுருக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சசிகலாவின் புகைப்படம் இல்லாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சசிகலாவின் புகைப்படம் இல்லாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டது. அப்போது அதிமுக துணை பொதுச் செயலாளராக தனது சகோதரியின் மகன் டிடிவி தினகரனை சசிகலா நியமித்துவிட்டு சென்றார். இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இடம்பெறக் கூடாது என ஓ.பன்னீர்செலவம் அணி நிபந்தனை விதித்தனர். இதையடுத்து இரு அணிகளும் ஒன்றிணைந்தன. பின்னர் பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டு பொதுச் செயலாளர் பதவியும் சசிகலாவால் ஏற்படுத்தப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவியும் நீக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தனியான அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை மீட்க தினகரன் போராட்டம் கை கொடுக்கவில்லை என்பதால் அவர் முழுவதும் அமமுகவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்தார்.  

சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அமமுகவும் இறங்குமுகமே இருந்தது. இந்த நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிட உள்ளது. பெரும்பாலும் தனித்தே போட்டியிடும் என சொல்லப்படுகிறது. உசிலம்பட்டி நகராட்சி இதற்காக உசிலம்பட்டி நகராட்சியில் அமமுக வேட்பாளர் ஒட்டிய போஸ்டரில் சசிகலாவின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சி 2ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் குணசேகரபாண்டியன் என்பவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, டிடிவி தினகரன் ஆகியோரின் படங்களும் வேட்பாளரின் புகைப்படமும் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சசிகலா புகைப்படங்கள் இருந்தன. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் சசிகலாவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

இது அமமுக நிர்வாகிகள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் கண்டித்தது. அது போல் சசிகலா ஏற்பாடு செய்திருந்த வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வுகளுக்கு அமமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என தினகரன் அறிவுறுத்தியிருந்ததாகவும் அதை மீறி கலந்து கொண்ட நடிகையும் மூத்த நிர்வாகியுமான ஒருவரை டிடிவி தினகரன் கண்டித்ததாகவும் தகவல்கள் எழுந்தது. அது போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போஸ்டர்களிலும் பிரச்சாரங்களிலும் சசிகலாவை முன்னிறுத்தக் கூடாது என டிடிவி தினகரன் உத்தரவிட்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டிடிவிக்கும் சசிகலாவுக்கு இடையே கட்சி சார்ந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!