சசிகலாவின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்… மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 11:18 AM IST
Highlights

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலையான சசிகலா, சட்டசபை தேர்தலின் போது தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என பரவலாக கூறப்பட்டது. அதற்கேற்றார்போல் தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்து பேசி அதனை பதிவு செய்து அதன் மூலம் தனது அரசியலை மீண்டும் தொடங்கினார். பின்னர் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது தனது காரில் அதிமுக கொடியுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கும் சென்றார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவும் அதிமுகவில் இடமில்லை என்றார். சமீபத்தில் ஓபிஎஸ் அளித்த பேட்டி எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு நேரெதிராக அமைந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஈபிஎஸ் ஓபிஎஸ் இடயே சிறு முரண்பாடுகள் நிலவின. இதற்கிடையே தற்போது தென்மாவட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட சசிகலா, தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை சென்றார்.

சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு தனியார் விடுதியில் தங்கிய அவர், இன்று காலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் சென்று அங்கு உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை நாளை நடைபெறுகிறது. அதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நேற்றே துவங்கின. இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரை தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார். கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் அமமுகவினர் ஏராளமானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர். அதிமுக - அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கவே சசிகலா இன்றே மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சசிகலாவின் அரசியல் நகர்வுகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் உலுக்கியுள்ளது. மேலும் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடுகள் இருப்பதாலும் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

click me!