முடிந்தது பரோல்..! முடிந்ததா வந்த காரியம்?

 
Published : Oct 12, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
முடிந்தது பரோல்..! முடிந்ததா வந்த காரியம்?

சுருக்கம்

sasikala parole finished but her work not finish

5 நாட்கள் பரோலில் வந்த சசிகலாவின் பரோல் முடிந்து சசிகலா, சென்னையிலிருந்து கிளம்பி, சிறைக்கு சென்றுவிட்டார்.

சசிகலாவின் பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், பரோலில் வந்த காரியம் முடிந்துவிட்டதா? என்றால், முடியவில்லை.

நடராஜனின் உடல்நலக் குறைவை காரணம் காட்டி 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தனது வருகையால் கட்சியிலும் ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும் என எதிர்பார்த்துள்ளார். ஆனால் தனது வருகையால் அப்படியொரு மாற்றம் நிகழவில்லை என்பதால் அதிருப்தியில் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.

கட்சிப் பிரச்னையைத் தீர்க்கலாம் என்று நினைத்த சசிகலாவிற்கு குடும்பத்தினரின் பிரச்னையைத் தீர்க்கவே நேரம் சரியாக போய்விட்டதாம். 

தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரின் ஆதரவாளர்களை பழனிசாமி அணியினர் கட்சியிலிருந்து தூக்கி எறிந்ததற்கு யார் காரணம் என தினகரன் மற்றும் திவாகரன் தரப்பினர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்கான காரணம் என ஒரு நீண்ட பட்டியலையே சசிகலாவிடம் கொடுத்துள்ளனர்.

திவாகரன் தரப்பில் தினகரன் மீதான குற்றச்சாட்டுகள்:

பழனிசாமியை நீங்கள் ஆட்சியில் அமர்த்தினீர்கள்; அதன்படி பழனிசாமி தலைமையில் ஆட்சி நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. தினகரன் கட்சி நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டிருந்தால் கட்சியும் ஆட்சியும் நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், உங்கள் பேச்சையும் மீறி தினகரன் வேட்பாளராக நின்றார். தேர்தல் செலவினங்கள் அனைத்தையும் அமைச்சர்களின் தலையில் கட்டினார். விளைவு.. அமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை. இதனால் அமைச்சர்கள் அச்சமடைந்தனர். தினகரன் கட்சிப் பணிகளை மட்டும் கவனித்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. கட்சி மட்டுமல்லாமல் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என தினகரன் அவசரப்பட்டார். 

தினகரனின் அவசரத்தால் நம்மை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பாஜக மேலிடம் உருவாக்கியது. அதனால்தான் நம் குடும்பத்தினர் அனைவரும் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டோம். நாம் உருவாக்கிய பழனிசாமி அரசை நாமே விமர்சிப்பதைக் கண்டு மக்கள் சிரிக்கிறார்கள். 

இவை அனைத்திற்கும் காரணம் தினகரனின் அவசரமான செயல்பாடுகள் தான் என திவாகரனும் அவரது ஆதரவு குடும்ப உறுப்பினர்களும் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர்.

தினகரன் தரப்பு விளக்கம்:

கட்சியை பழனிசாமி கட்டுப்பாட்டிலிருந்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகவே தினகரன் மாநாடுகளை நடத்தினார். பழனிசாமி அணிக்கு போட்டியாக தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என்ற பிரச்சாரத்தால், நம் குடும்பம் மீது கூறப்பட்டுவந்த துரோகக் குற்றச்சாட்டு மறைந்துவிட்டது என சசிகலாவிடம் தினகரன் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.

இதையடுத்து தினகரனை அழைத்த சசிகலா, திவாகரனின் பேச்சைக்கேட்டு நடக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் தினகரன் மறுப்பு தெரிவித்ததால் சசிகலா கண்ணீர் சிந்தியதாகக் கூறப்படுகிறது.

கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பரோலில் வந்த சசிகலாவிற்கு, குடும்பப் பிரச்னையைத் தீர்த்துவைக்கவே நேரம் சரியாகிவிட்டதாம். குடும்பப் பிரச்னையாவது தீர்த்து வைக்கப்பட்டதா என்றால், அதுவும் கிடையாது.. 

பரோலில் வந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் மன வருத்தத்துடன் மீண்டும் சிறைக்கு சென்றுவிட்டார் சசிகலா...
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!