
முதலமைச்சர், நான் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் கலந்த பேசிய பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஓ.பி.எஸ். இன்று சந்தித்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்புக்குப் பின்றர், ஓ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் அளித்ததாக தெரிவித்தார். தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரி குறித்து அவரிடம் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன் என்றார். பிரதமர் மோடியிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.
எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணையும்போது பல்வேறு கோரிக்கைகளை நீங்கள் வைத்தீர்கள், அது நிறைவேற்றப்பட்டுள்ளதா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் நானும் நிபந்தனை இல்லாமல்தான் இணைந்தோம் என்றார். முதலமைச்சருடன் எனக்கு எந்த மன வருத்தமோ, கருத்து வேறுபாடோ இல்லை என்றார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் எந்த நிலையில் பணியாற்றினேனோ அந்த நிலையில்தான் இப்போதும் பணியாற்றி வருகிறேன் என்று கூறினார்.
அதிமுக இன்று ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறது என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறி உள்ளது என்றும் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., முதலமைச்சர், நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து பேசிய பிறகே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இனி அதிமுகவில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே டெங்கு பரவ காரணம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., உள்ளாட்சி தேர்தலுக்கும் டெங்குவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று பதில் கேள்வி எழுப்பினார்.
டி.டி.வி. தினகரன் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., தினகரனுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்க இனி வாய்ப்பில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தின் தேவை 10 லட்சம் வீடுகள் என அறியப்பட்டுள்ளதாகவும், தற்போது 3 லட்சம் வீடுகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் இது குறித்து பிரதமரிடம் கூறியுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.