சசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..!

By Asianet TamilFirst Published Jul 28, 2021, 9:28 PM IST
Highlights

சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேச வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டைக்கு தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசியுள்ளார் பா.ரஞ்சித். அது நல்ல திரைப்படம்தான். அது வரலாற்று ஆவணம். ஆனால், எம்ஜிஆர் பின்பற்றி வந்த இளைஞர்களை அசிங்கப்படுத்தும்படி காட்சிகள் இருப்பது தவறு. தவறான செயல் செய்யும் நபர் வீட்டில் எம்ஜிஆரின் புகைப்படம் உள்ளது. இது விஷமத்தனமான செயலாகும். சிறந்த படைப்பாளியான ரஞ்சித் இப்படி செய்ததை ஏற்க முடியாது. எம்ஜிஆர் பற்றிய கருத்துக்கள் தேவையற்றது.
எம்ஜிஆர் செயல்களையெல்லாம் மறைத்து திமுகவை சார்ந்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. திமுக அரசியல் படமாக சார்பட்டா பரம்பரை எடுத்திருப்பதாக கூறுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. உண்மைக்கு புறம்பாக எம்ஜிஆர் குறித்து பேசியிருப்பது ஏற்கக்கூடிய இல்லை. இது ரஞ்சித் மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும். நல்ல ஒரு கலைப் படைப்பு அரசியல்படுத்தப்பட்டது வருத்தமாக உள்ளது. தமிழகத்தின் அரசியல் என்பது திமுக-அதிமுக என்ற அச்சில்தான் சுழலும். இதில் மாற்றுக்கருத்து என்பதே இல்லை. திமுகவுக்கு மாற்று பாஜகதான் என அக்கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை பேசியிருக்கிறார். அதை தவறு என்று சொல்ல முடியாது.
அதிமுகவின் வலிமை திமுகவுக்கு நன்றாகத் தெரியும்.  ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக உயிர்ப்போடு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் திறணற்ற ஆட்சிக்கு பொதுமக்கள் தக்க பதிலடி தருவார்கள். அதிமுக பெரிய வெற்றியைப் பெறும் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் எனக்கூறும் சசிகலா கூறும் வார்த்தைகள் தேவையற்றது. ஓபிஎஸ்-இபிஎஸ் ஏற்கனவே நல்ல மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள். அதிமுகவில் தற்போது எந்த காலியிடமும் இல்லை. சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசவேண்டும்” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

click me!