
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமு பொது செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து கடந்த 15ம் தேதி மாலை சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சரணடைந்தனர். அங்கு சுதாகரன் தனி சிறையிலும், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஒரே அறையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், தினமும் வழக்கறிஞர்கள், சசிகலாவை சந்தித்து வருகின்றனர். அதேபோல் கட்சி நிர்வாகிகளும், அவரது உறவினர்களும் சந்தித்து வந்தனர்.
இதனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளுக்குள் ஈகோ பிரச்சனை ஏற்பட்டது. ‘‘எங்களை போல சசிகலாவும், குற்றம் செய்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு மட்டும், தினமும் உறவினர்கள் பார்க்க அனுமதி கொடுப்பதா என கேள்வி எழுப்பினர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க வாரத்தில் 3 நாள் மட்டும் அனுமதி வழங்கப்படும். அதில் ஒரு மணிநேரம் மட்டுமே பேச நேரம் ஒதுக்கப்படும். ஆனால, சசிகலாவை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வார நாட்களில் ஏராளமானோர் வருகின்றனர். 5 மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் பேசுகின்றனர்” என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் மட்டும் தற்போது, அவரை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
கடந்த வாரம் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றனர். ஆனால், சிறை அதிகாரிகள், 3 பேரையும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.