
தமிழகத்தில் உள்ள பாஜகவும் திராவிட கட்சித்தான் என செய்தியாளர்களிடம் பொங்கி எழுந்தார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நெடுவாசல் பகுதியில் உள்ள மக்கள் மட்டும் அல்ல, கிழக்கு கடற்கரை பகுதி மக்கள் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் அமையும் என்றால் அதை கொண்டு வருவதில் தவறு இல்லை. ஆனால், இந்தத் திட்டத்தை பற்றி எதுவும் தெரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் சில கட்சியினர் விஞ்ஞானிகளா?
நதிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும். தேசியநதிகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
ஆனால், நதிகள் இணைப்பு பற்றி எந்த அடிப்படையும் அறியாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, "நதிகளை இணைக்கக் கூடாது' என கூறினார்.
அவரது வார்த்தையால் நதிகள் இணைப்பு திட்டம் முடங்கிப் போனது. இதனால், நாடே பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலை தமிழகத்துக்கு வந்து விடக் கூடாது.
தேச நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை, எதிர்க்க இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. எந்தத் திட்டம் பற்றியும் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். அதன் விளைவுகள் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைத்து, பின்னர் முடிவ்வெடுக்க வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தம் திட்டம் தேவையே இல்லை.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகள், எத்தனை புதிய அணைகளை கட்டியது. எத்தனை தடுப்பணைகள், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கியது.
தமிழ்நாட்டில் திராவிட கட்சி என்பதே கிடையாது; கழகங்கள்தான் உள்ளன. திராவிடம் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்றால், நான் தமிழன் தான். நானும் திராவிடன் தான். பாஜகவும் திராவிட கட்சிதான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
2008ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற திமுக இருந்தபோதுதான் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.