
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக பிளவுபட்டு சசிகலா – ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்படுகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் எந்த அணியில் இருக்கிறார்கள் என தெரியாமல் குழம்பி உள்ளனர்.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, திடீரென அரசியலில் பிரவேசம் ஆனார். இதனால், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
முன்பு தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 24ம் தேதி அறிவிப்பதாக தீபா கூறினார். அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் நிர்வாகிகள் பட்டியலை விரைவில் வெளியிடுவதாக அறிவித்தார். இதில், அவரே பொருளாளராக செயல்படுவதாக அறிவித்து கொண்டார். இதற்கிடையில், தீபாவுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தீபாவின் வீட்டில், கடந்த சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடந்த்து. அதில், தீபாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, புதிதாக துவங்கிய அமைப்பின் தலைவராக சரண்யாவையும், செயலராக ஏ.வி.ராஜாவையும் நியமித்தார்.இதற்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம், ’பேரவையின் செயலராகவும் நானே செயல்படுவேன். நிர்வாகிகளை இறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. விரைவில் நிர்வாகிகள் பட்டியலும், கொள்கையும் வெளியிடப்படும்' என தெரிவித்தார்.
அப்போது, அவரது வீட்டுக்குள் திடீரென நுழைந்த தொண்டர்கள் சிலர், ஏ.வி.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீபா, செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துகொண்டார்.
இந்நிலையில், நேற்று மாலை தீபா வீட்டுக்கு செய்தியாளர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள், செய்தியாளர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், ‘கொள்கை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. நிர்வாகிகள் பட்டியல் தற்போது வெளியீடவில்லை’என தீபா தரப்பினர் கூறினர்.
இதுகுறித்து தீபா ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:-
செய்தியாளர்களை தீபா சந்தித்தபோது, தொண்டர்கள் திடீரென கோஷமிட்டு ரகளை செய்தனர். இதை அவர் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. இதனால்,அவர் யோசித்து செயல்பட முடிவு செய்திருக்கிறார். தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிந்த பின்னரே, நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்படும். பேரவையின் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றனர்.