
மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன், போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டார் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னை பகீர் தகவலை கூறியுள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, பொன்னையன் பேசியதாவது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன், போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்டார்.
ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தியதால், அவர் சுய நினைவு இழந்தார். அந்த நிலையிலேயே, அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா இறந்தார்.
ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறை ஏற்பட்டு சிகிச்சை பெற்றபோது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மருத்துவரான மைத்ரேயன் உள்பட கட்சி முக்கிய நிர்வாகிள் யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவைப் பார்க்கச் சொன்றால், நோய் தொற்று ஏற்படும் என கூறி, தடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். அதுபோல் நோய் தொற்று ஏற்படும் நிலை இருந்தால், 73 நாட்கள், ஜெயலலிதாவின் அருகிலேயே இருந்த சசிகலாவுக்கு ஏன் எந்த நோயும் வரவில்லை.
ஜெயலலிதாவை யாரும் சந்திக்க விடாமல் செய்தது மட்டுமின்றி, அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சை அனைத்தையும் அப்பல்லோ நிர்வாகம் மாற்றி மாற்றி கூறியது. இதனால், அப்பல்லோ நிர்வாகத்துக்கும், சசிகலாவுக்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அதுபோன்ற உடன்பாடு இருப்பதால்தான், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து, சரியான பதிலை அப்பல்லோ நிர்வாகம் கூறவில்லை. எதற்காக மாற்றி மாற்றி கூற வேண்டும்.
விரைவில், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சார சுற்றுப் பயணம் செய்து, பொதுமக்கள், கட்சித் தொண்டர்களை சந்திக்கும் ஓ.பி.எஸ். அனைத்து தகவல்களையும் மக்கள் மத்தியில் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.