
தமிழக அரசியலில் ஆளுங்கட்சியினரிடையே நடைபெற்று வரும் குதிரை பேரம் அனல் பறக்கிறது.
அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் இத்தருணத்தில் சசிகலாதான் நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
மறுபுறம் பன்னீர்செல்வம் கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார் என அவரது தரப்பு தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் மக்களவை எம்.பி.க்களான பி.ஆர். சுந்தரம், அசோக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து அவர் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் ஆதரவை தெரிவித்தார்.
தனது ஆதரவுகள் ஒவ்வொன்றாக களைய தொடங்கியதையடுத்து சசிகலா கொதித்தெழுந்து ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுவரைக்கும் எந்த ஒரு கட்சி தலைவரும் எம்.எல்.ஏக்களை பார்க்க போனதில்லை. இந்த நிகழ்வு தற்போதைய ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது.
கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு செல்ல சசிகலா திட்டம் தீட்டியிருப்பதாகவும், சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை சந்திக்க சசிகலா சென்றிருப்பது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.