
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டன. இதனால், இரு அணிகளுக்கு இடையே கடும் மோதல் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், இரு அணிகளும் ஒன்று சேர முன் வந்துள்ளன.
இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், அதிமுகவுக்கு சொந்தமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது. அதனை மீட்க வேண்டுமானால், இரு அணிகளும் ஓரணியாக சேர வேண்டும். அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அதிமுகவினல் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருக்க கூடாது. ஜெயலலிதாவின் மறைவில் நீதி விசாரணை வேண்டும். இதை தவிர வேறு நிபந்தனைகள் இல்லை என கூறினார்.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில், டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து விலக்குவது என்றும், கட்சி மற்றும் ஆட்சியில் அவரை சேர்க்க கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையறிந்த டிடிவி.தினகரன், நேற்று மாலை 3 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக அறிவித்தார்.
ஆனால், சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவர் மீது தொரடப்பட்டுள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மாலை 3 மணிக்கு வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டிடிவி.தினகரன் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த அதே நேரத்தில் அனைத்து அமைச்சர்களும், தங்களது சொந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதையொட்டி அமைச்சர் கே.சி.வீரமணி, தனது சொந்த ஊரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுகவில் பிரிந்து இருக்கும் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டுமானால், ஜெயலலிதாவின் மறைவில் நீதி விசாரணை வேண்டும். கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இருக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை வைத்துள்ளார். அதை பற்றி என்னால் கூற முடியாது.
என்னை பொறுத்தவரை சசிகலா கட்சியில் இருக்க கூடாது. அவரது குடும்பமே கொலைக்கார குடும்பம். இதனால், தினகரன் குடும்பத்தார் தலையீடு இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.