
அதிமுக பொது செயலாளர் பதவியில் இருந்து விலக சம்மதம் தெரிவித்துள்ள சசிகலா, அதற்காக இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா குடும்பத்தை சேர்ந்த யாரும் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தாமல் விலகி இருக்க வேண்டும் என்பதே டெல்லியின் நிபந்தனையாக உள்ளது.
அதையும் மீறி, முதல்வர் பதவியை குறிவைத்து நெருங்கிய சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் களமிறங்கிய தினகரன், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சசிகலா குடும்பத்தினர் அரசியலை விட்டு முற்றிலும் ஒதுங்கினால், அவர்களுக்கான பாதிப்பும் அகலும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவுக்கும், சாதகமான பதில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசிய, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ க்கள், டெல்லியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளனர்.
மேலும், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று டெல்லி விரும்புவதால், பொது செயலாளர் பதவியில் இருந்து விலகுவது நல்லது என்றும் அவர்கள் சசிகலாவிடம் கூறி உள்ளனர்.
அதை கேட்ட சசிகலா, அதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், டெல்லியின் விருப்பப்படி, முதல்வர், பொருளாளர் ஆகிய இரு பதவிகள் பன்னீருக்கு வழங்கப்பட்டாலும், எடப்பாடிக்கு துணை முதல்வர் பதவியும், வைத்திலிங்கத்திற்கு பொது செயலாளர் பதவியும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம், தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன் என்றே பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில், வைத்திலிங்கத்திற்கு பொது செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று சசிகலா நிபந்தனை விதிப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? என்கின்றனர் அதிமுகவினர்.
காரணம் எதுவாக இருந்தாலும், இன்னும் சில நாட்களில், நிகழும் அரசியல் மாற்றங்கள் அதை தெரியப்படுத்தாமலா இருக்கும்?