எடப்பாடி பழனிச்சாமி மனது வைக்காமல் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது.? ஓபிஎஸ்ஸுக்கு உணர்த்திய ஈபிஎஸ்..!

Published : Mar 28, 2022, 09:28 AM IST
எடப்பாடி பழனிச்சாமி மனது வைக்காமல் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே முடியாது.? ஓபிஎஸ்ஸுக்கு உணர்த்திய ஈபிஎஸ்..!

சுருக்கம்

2017-இல் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு எப்படி ஆதரவு இல்லாமல் இருந்ததோ, அதேபோல சசிகலாவை இணைக்கலாம் என்று ஓபிஎஸ் நினைத்தாலும், அவருக்குப் பக்கபலமாக குரல் கொடுக்க அதிமுகவில் ஆதரவு இல்லை. 

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு சசிகலா காலம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருப்பதால் சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜெயலலிதா ஆளுமை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்தது. இதனால், அதிமுக தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். கடந்த காலங்களில் அதிமுக தோல்வியைச் சந்திருந்தாலும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு கட்சியை ஜெயலலிதா திருப்பியிருக்கிறார். ஜெயலலிதாவின் ஒற்றை ஆளுமையும் அவருடைய தலைமையாலும் அது சாத்தியமானது. ஆனால், தற்போது அதிமுகவில் ஈபிஎஸ் - ஒபிஎஸ் என இரட்டைத் தலைமை. மேலும் டிடிவி தினகரனின் வாக்குப் பிரிப்பு போன்ற காரணங்களால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை பழைய நிலைக்குக் கொண்டு வரவும் சசிகலா தலைமையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

ஓபிஎஸ்ஸை பாராட்டிய சசிகலா

அண்மையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் இணைக்க தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அதிமுகவில் பரபரப்பு தொற்றியது. மேலும் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஒ. ராஜா சசிகலாவைச் சந்தித்து பேசி அதிமுகவுக்கு அதிர்ச்சியும் அளித்தார். இதனால் ஓ. ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ் - ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அண்மையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவோ அவருடைய குடும்பத்தினரோ சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகம் இல்லை’ என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். மேலும், ‘சின்னம்மா மீது மரியாதை இருக்கிறது’ என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஓபிஎஸ் உண்மையைச் சொல்லியிருக்கிறார்’ என்று சசிகலாவும் பாராட்டச் செய்தார்.

கேட் போடும் ஈபிஎஸ்

இதனால், ஓபிஎஸ் தரப்பும் - சசிகலாவும் நெருங்கி வருவது போன்ற தோற்றமும் ஏற்பட்டது. சசிகலா விரைவில் அதிமுகவில் இணைய இதுபோன்ற பேச்சுகள் காரணமாக அமையலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை கட்சியில் சேர்க்க தன்னுடைய எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஈபிஎஸ் நேற்று பேட்டி அளிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அனைத்து மாவட்டங்களும், தலைமைக்கழகமும் இணைந்து, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும், ஓபிஎஸ்சும் இணைந்து கையெழுத்திட்டு அதனை அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்துவிட்டது. மீண்டும் அவரை சேர்க்க வாய்ப்பே இல்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது” என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகப் பேசியிருக்கிறார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லை

எடப்பாடி பழனிச்சாமியின் இதே கருத்தைத்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் வெளிப்படுத்தினார். ‘நேற்று இன்று நாளையும் இதே நிலைதான் தொடரும்’ என்று ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க ஓபிஎஸ் மனதளவில் தயாராகிவிட்டாலும், அதை ஆதரவாக திரட்ட அவருக்கு கட்சியில் பலம் இல்லை. 2017-இல் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு எப்படி எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு பெரிய அளவில் இல்லாமல் இருந்ததோ, அதேபோல சசிகலாவை இணைக்கலாம் என்று ஓபிஎஸ் நினைத்தாலும், அவருக்குப் பக்கபலமாக குரல் கொடுக்க அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதே யதார்த்தம். இதனால், அதிமுகவுக்கு திரும்பும் சசிகலாவின் கனவு அப்படியே நீடிக்கவே செய்கிறது. 

மேலும் தான் மசியாமல் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதையும் ஓபிஎஸ்ஸுக்கு பேட்டி மூலம் ஈபிஎஸ் உணர்த்தியிருக்கிறார். சசிகலாவை நீக்குவது என்பது நாம் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதானே என்றும் ஓபிஎஸ்ஸுக்கு ஈபிஎஸ் கோடிட்டு காட்டியிருக்கிறார். இதனால் சசிகலா அதிமுகவுக்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. அது சசிகலா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!