‘இந்த சலசலப்புகள் எல்லாம் எனக்கு புதிதல்ல’ - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா துணிச்சல் பேச்சு

 
Published : Feb 12, 2017, 08:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
‘இந்த சலசலப்புகள் எல்லாம் எனக்கு புதிதல்ல’ - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா துணிச்சல் பேச்சு

சுருக்கம்

அதிமுக கட்சிகள் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் எல்லாம் எனக்கு புதிது அல்ல; இதை ஜெயலலிதா உடன் இருந்து ஏராளமாக பார்த்து இருக்கிறேன் என்று அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் சசிகலா துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மீதமுள்ள 4½ ஆண்டுகளையும் அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்யும் என்றும், அரசியலில் பெண்கள் சாதிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் குழப்பம்

தமிழகத்தில் அரசியலில் நொடிக்கு, நொடி புதிய, புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.  அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவை, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி, சட்டசபைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதே சமயம், சசிகலாவை பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் முன் மொழிந்த,  முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கி, தனது தலைமையில் ஒரு அணியாக உருவாக்கி செயல்படுகிறார். இரு பிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். இதனால், அடுத்து யார் ஆட்சி அமையும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை கட்டம் கட்டி இழுக்கும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு செயல்படுகிறது. இதனால், 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கடந்த 2 நாட்களாக சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், நாளுக்கு நாள் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி வருகிறது.

4½ ஆண்டுகள்

இந்நிலையில், கூவத்தூரில் தனியார் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சசிகலா 2-வது நாளாகச் சென்றார்.  அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் சொல்லுகிறேன். அடுத்த 4½ ஆண்டுகளையும் அதிமுக அரசு ஆட்சி செய்யும், மக்களுக்கு தொண்டாற்றும் என்றார்.

சலசலப்பு புதிதல்ல

உங்களுக்கு எதிர்ப்புகள் கடுமையாக இருக்கிறதே என்று நிருபர்கள்  கேட்டபோது, “ அதிமுக நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரன் மறைந்த போது, இதே போன்ற எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. அதை ஜெயலலிதா மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு முறியடித்தார். அடுத்தடுத்த தேர்தல்களில் அபாரமாக வெற்றி பெற்றார். அப்போது இதேபோல் கட்சியை துண்டாக்க முயற்சிகள் நடந்தன. அதை முறியடித்தோம்.  இந்த சலசலப்புகள் எல்லாம் எனக்கு புதிதல்ல, எளிதாக முறியடிப்பேன்.

பெண்கள் சாதிப்பது

அதேபோன்ற முயற்சிகள்தான் இப்போதும் நடக்கின்றன. அந்த சவால்களை நாங்கள் எளிதாக முறியடித்து வெற்றி பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசவே நான் செல்கிறேன். இன்றைய சூழலில் அரசியலில் பெண்கள் சாதிப்பது என்பது கடினமான விஷயம்'' என்றார்.

காரணம் தெரியுமா?

பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லையே எனக் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர்கூறுகையில், “ அதற்கான காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஏற்கனவே 10 எம்.பி.க்கள் எதிர்அணிக்கு போய்விட்டார்கள்''

தைரியமாக இருங்கள்

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுகிறாரே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “ இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான நேரத்தில் பதில் அளிப்பேன். ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க தாமதம் செய்வது குறித்து வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

எங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். தைரியமாக இருங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்'' என்றார்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!