
சந்திரமுகி படத்தில் வரும் கங்கா, சந்திரமுகியாகவே தன்னை நினைத்து கொண்டாள் என்று ஒரு வசனம் வரும். அது போல, ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலாவும் தன்னை ஜெயலலிதாவாகவே நினைத்து கொண்டார்.
ஜெயலலிதா போலவே, புடவை கட்டினார், கொண்டை போட்டார், ஐயங்கார் பொட்டு வைத்தார். ஆனாலும், நாஞ்சில் சம்பத் சொன்னது போல, ஊர் குருவி உயர, உயர பறந்தாலும் பருந்தாகவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல, முதலமைச்சர் பதவி நெருங்கி வரும்போது, அதை விட வேகமாக பறந்து வந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அவரை பெங்களூரு சிறையில் கொண்டு சேர்த்து விட்டது.
என்ன இருந்தாலும், ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூடவே இருந்தார் அல்லவா சசிகலா. அதனால், கட்சி, ஆட்சி ஆகிய இரண்டிலுமே தமது பிடி தளர்ந்ததை அறிந்து துடித்து போனார்.
ஜெயலலிதா இருந்த வரை, பவர்புல்லாக வேலை செய்த தமது ஜாதகம், அவர் இறந்த பின்னர், அப்படியே, எதிர் திசையில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதே என கலங்கினார்.
இந்நிலையில், ஜெயலலிதா இல்லை என்றாலும், அவர் உடுத்திய புடவையாவது, தன்னுடன் இருந்தாலாவது, துயரங்கள் குறையும் என்று சசிகலாவுக்கு மனதளவில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதனால், சென்னை வந்த இளவரசி மகன் விவேக்கிடம், ஜெயலலிதா விரும்பி அணிந்த பச்சை நிற புடவை ஒன்றை எடுத்து வருமாறு சொல்லி அனுப்பி உள்ளார் சசிகலா.
விவேக்கும், போயஸ் தோட்டம் வந்து, அவரது அத்தை சசிகலா விரும்பியது போல், ஜெயலலிதாவின் பச்சை புடவை ஒன்றை எடுத்து சென்று சிறையில் உள்ள சசிகலாவிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பச்சை புடவை, சிறையில் உள்ள சசிகலாவை சாந்தப்படுத்துமா? இல்லை நள்ளிரவில் ஆவியாக வந்து அலறல் சத்தத்தை எழுப்புமா? என்பது போகபோகத்தான் தெரியும்.