
பரபரப்பான சூழ்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான பணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், சரணடைய கால அவகாசம் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி இன்று காலை தரை மார்க்கமாக காரில் பெங்களூர் புறப்பட்டு சென்றார் சசிகலா.
அவருடன் இளவரசியும் உடன் சென்றார். வாகன அணிவகுப்பாக சென்ற சசிகலா 5 மணி அளவில் பெங்களூர் சென்றடைந்தார். பெங்களூரில் பரப்பன அக்ரஹாரத்தில் அமைந்துள்ள தனி நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்பு சசிகலா ஆஜரானார்.
அங்கு அவர் முறைப்படி சரணடைந்தார். அவருடன் இளவரசியும் சரணடைந்தார். இருவரையும் உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டார். அப்போது சிறைக்குள் சென்ற அவரை தம்பிதுரை, வழக்கறிஞர்கள் வழியனுப்பி வைத்தனர்.
சிறையில் அடைப்பதற்கு முன் சசிகலாவிடம் இருந்து அவர் அணிந்திருக்கும் நகைகள், கைகடிகாரம், போன்றவை வாங்கப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கென்ன நோய்கள், எடுத்துகொள்ளும் மருந்துகள், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது. பின்னர், வழக்கமான சசிகலாவின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சிறைக்குள் அனுப்பபட்டார்.
சசிகலா முதலமைச்சரோ, அமைச்சாரோ, அரசு பதவியோ, எம்.எல்.ஏ, என எந்த பதவியும் வகிக்கவில்லை. அதேபோல் பெரிய அளவில் வரி கட்டுபவரும் இல்லை.
இதனால் சிறையில் அவருக்கு சாதாரண வகுப்பே ஒதுக்கப்படும். சலுகைகள் கிடைப்பது கடினம். சிறையில் இனிமேல் சசிகலா கைதி எண் 10711 என்றே அழைக்கபடுவார். இளவரசி கைதி எண் 10712 என்று அழைக்கபடுவார்.
பெண்கள் சிறையில் அடைக்கபடும் சசிகலா இரண்டு பேர் தங்கும் சிறை அறையில் அடைக்கபடுவார்.
அவருக்கு 3 புடவைகள் வழங்கப்படும். இனி அதைதான் அவர் அணிய வேண்டும். தினமும் அதிகாலையில் வழக்கமாக கைதிகளுடன் எழுந்து விட வேண்டும். சக கைதிகளுடன் காலைக்கடனை முடித்த பிறகு கைதி அணிவகுப்பில் நின்ற பின் காலை 6.30 மணிக்கு காலை உணவு வழங்கப்படும்.
சிறையில் மெழுகுவர்த்தி ஊதுவர்த்தி தயாரிக்கும் பணி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கைதிகளுடன் சேர்ந்து சசிகலாவும் இளவரசியும் வேலை செய்ய வேண்டும்.
பின்னர் காலை 11.30 மணியளவில் மதிய உணவு வழங்கப்படும். பின்னர் மீண்டும் தமது பணியை தொடர வேண்டும். ஒரே ஒரு கப் தேநீர் வழங்கப்படும்
மாலை 6.30 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். அதை சாப்பிட்ட பின் சிறை அறைக்குள் அடைக்கபடுவார். அத்துடன் அன்றைய நாள் முடியும்.
சிறைக்குள் பொது இடத்தில் டிவி இருக்கும். வாரம் ஒருமுறை சக கைதிகளுடன் தொலைகாட்சியை காணலாம். இதுதவிர மருத்துவ பரிசோதனைகள் உண்டு. செய்திதாள்கள் அனுமதி இல்லை.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவசிய காரணம் இருக்கும் பட்சத்தில் சில நாட்கள் பரோல் வழங்கப்படும்.