Sasikala : மறுபடியுமா..? 'சின்னம்மா'வுக்கு அடுத்த சிக்கல்…! தொண்டர்கள் ஷாக்

By manimegalai aFirst Published Dec 17, 2021, 8:32 AM IST
Highlights

பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிவிடுவது என்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான நாளில் இருந்து களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. ஆனால் அவரின் முயற்சிகள் இன்னமும் முயற்சிகளாகவே இருக்கிறது தவிர, பலன் கிடைத்ததாக தெரியவில்லை.

இன்னமும் தமது ஆதரவாளர்களையும், அதிமுகவில் தம்முடன் தொடர்பில் உள்ளவர்களுடன் டச்சில் இருக்கும் சசிகலாவுக்கு இப்போது புதிய சிக்கல் எழுந்து இருக்கிறது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது சொகுசு வசதிகள் தருமாறு அதிகாரிகளுக்கு 2 கோடி கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு சசிகலா மீது எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை சிறைத்துறையின் டிஐஜியாக இருந்த ரூபா முன்வைக்க பெரும் பரபரப்பு எழுந்தது.

உடனடியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் தலைமையில் குழு இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. அதன்பின்னர் சசிகலா மீது 2018ம் ஆண்டு வழக்கு பதிவானது. நிலைமைகள் அப்படியே இருக்க இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்காக ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி பொதுநல வழக்கு கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 25ம் தேதி வழக்கில் விசாரணை அறிக்கையும் தாக்கலாகி பின்னர் செப்டம்பர் 7ம் தேதி விசாரணையும் நடைபெற்றது. அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் கோர்ட்டோ 30 நாட்கள் மட்டும் அனுமதி தந்தது. கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டது. அதன் பின்னரும் அக்டோபர் 10ம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நிலைமைகள் இப்படி இருக்க…. இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்துறை அமைச்சர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

2 வாரங்களில் உரிய அனுமதி கிடைத்துவிடும், அதன் பின்னர் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கு விசாரணை மேலும் 2 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஒன்று போய் ஒன்று வருவது போல இப்போது 2 கோடி ரூபாய் லஞ்ச வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

இனி வரும் 2 வாரங்களுக்குள் இதன் மீது அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக சசிகலாவுக்கு அடுத்த சிக்கல் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து துரத்தும் இது போன்ற சட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள என்றோ சசிகலா தயாராகிவிட்டார் என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், விரைவில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் அது எப்போது நிஜமாகும் என்று தெரியாத நிலை தான் தற்போது உள்ளது என்பது தான் யதார்த்தம்….!!!

click me!