
எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு தனித்து விடப்பட்டார் டிடிவி தினகரன். இரட்டை இலை சின்னம் பெறுவதிலேயே குறியாக இருந்த அவருக்கு சின்னம் கிடைக்காமல் போனது. தேர்தல் ஆணையம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.
டிடிவிக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த 5 எம்.பி.க்கள் முதலமைச்சர் எடப்பாடி அணிக்கு மாறியுள்ளனர்.
எடப்பாடி அணிக்கு மாறிய எம்எல்ஏக்கள், அதிமுக சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு இருப்போம் என்ற தொனியில் பேசியுள்ளனர். இது குறித்து டிடிவி தினகரன் பேசும்போது, அணி மாறிய எம்.பி.க்கள், என்னிடம் கூறிவிட்டுதான் சென்றதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தகுதி நீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏ.க்களும் படிப்படியாக எடப்பாடி அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் அவர் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தால், தினகரனுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் சந்திக்க இன்று பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது அவரிடம், மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூருவில் சசிகலாவை சந்தித்துவிட்டு, இன்று மாலையே தினகரன் சென்னை திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், சென்னை திரும்பியதும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வேண்டாம் என்று கூறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தப் பிறகு, தினகரன் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.