
‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுத்துமா?’ என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்களுக்கும் தேசிய ஊடகங்களின் கவனம் தமிழகத்தின் மீது விழுந்தது, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் கொஞ்சம் அசைத்து பார்க்கின்றன.
அப்படி ஒரு அசைவு நேற்று நடந்துள்ளது, இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றியை அடுத்து, “இந்தியாவின் ஒரு மூலையான தமிழ்நாட்டில் மோடி மற்றும் அமித் ஷாவின் மாயாஜாலம் வேலை செய்யாதெனத் தெரிகிறது.
ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு 102 வாக்குகளும் பாஜகவுக்கு 66 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன” என்று நேற்று காலை 11 மணியளவில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் பெற்றிருந்த முன்னிலை குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார். “பணம் பாடாது, நடனமாடாது. ஆனால், கண்டிப்பாகப் பணம் பேசும், வாக்களிக்கும். மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தனது அடுத்த பதிவில் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. டெல்லி தர்பாரை எதிர்த்து நிற்பவர்களை தெற்கில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் திமுக கூட டெல்லியுடன் நேசம் பாராட்டுவதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.