
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். ஆனால், விஷாலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளுங்கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்கவே தினகரன் விஷாலை களமிறக்கியுள்ளார் என்ற தகவலும் அதிமுகவினர் மத்தியில் உலாவியது. ஆனால், இதை விஷாலும் தினகரனும் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தினகரன் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தினகரனுக்கு வாழ்த்து வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஷால் கூறியுள்ளதாவது, அபார வெற்றி பெற்றிருக்கும் திரு தினகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியை பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். திரு. தினகரன் அவர்கள் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்.
இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற திரு. தினகரன் அவர்களுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற திரு. தினகரன் அவர்கள் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.