மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர் இவர் தான்... பொதுக்குழு மேடையில் அறிவித்த சரத்குமார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 3, 2021, 2:53 PM IST
Highlights

தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை குழு அமைத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சியும் விலகியதாக அறிவிப்பு வெளியானது. அதிக அளவிலான சீட்டுக்கள் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த இருகட்சிகளும் தத்தமது கூட்டணி கட்சிகளிடம் இருந்து விலகின. மேலும் சமக மற்றும் ஐ.ஜே.கே ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணியை அறிவித்துள்ளன. திராவிட கட்சிகள் இல்லாத மாற்றத்திற்கான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சரத்குமார்,  கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 


இதனிடையே, தூத்துக்குடியில் உள்ள திரவியபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. அதில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் பேசிய சமக தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், மூன்றாவது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தான் என்றும் அறிவித்தார். 

click me!