கிருஷ்ணகிரி அணையை கூறுபோட்ட சமூக விரோதிகள்..!! டன் கணக்கில் மணல் கொள்ளை, கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2020, 4:31 PM IST
Highlights

தூர்வாரப்பட்டுவரும் நிலையில் அணையில் வெறும் மூன்று அடிக்கு கீழ் மணல் கிடைப்பதால் இதனை சாதமாக்கிக்கொண்ட சமூக விரோதிகள், விவசாயிகள் என்ற போர்வையில் தினந்தோறும் இரவில் ஆயிரக்கணக்கான டன் அளவுக்கு மணலை கொள்ளையடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை தூர்வாரும் போர்வையில் மணல், களிமண் போன்றவை  சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளன.  கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கட்டி முடிக்கப்பட்டு 62 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வற்றிப்போனது. அணையில் பெங்களூரில் இருந்து அடித்துவரப்பட்ட கழிவு சகதிகள் அதிகளவில்  தேங்கியதால் விவசாயத்திற்காக தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் அணை பாசன பகுதிகளில் கடமடை வரை தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதித்தது. இதையடுத்து  கே.ஆர்.பி.அணை வறண்ட நிலையில் உள்ளபோதே தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  

தமிழக அரசு அணையை தூர்வாரி அதிலுள்ள வண்டல் மண், கிராவல் மண் , களிமண் ஆகியவற்றை விவசாய நிலங்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் தூர்வாரும் பணி துவக்கப்பட்டது. இதுவரை 52ஆயிரம் டன் வண்டல் மண், களிமண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையை தூர்வாருகின்றோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் துணையோடு கடந்த 15 நாட்களாக அணையில் இருந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டுவருகிறது. தூர்வாரப்பட்டுவரும் நிலையில் அணையில் வெறும் மூன்று அடிக்கு கீழ் மணல் கிடைப்பதால் இதனை சாதமாக்கிக்கொண்ட சமூக விரோதிகள், விவசாயிகள் என்ற போர்வையில் தினந்தோறும் இரவில் ஆயிரக்கணக்கான டன் அளவுக்கு மணலை கொள்ளையடித்து விற்பனைசெய்து வருகின்றனர்.

மேலும் தூர்வாரத் தொடங்கிய சில நாட்களிலிலேயே  விவசாயிகள் தங்கள் தேவைக்கு போதுமான மண் எடுப்பதை நிறுத்தி கொண்டனர். ஆனால் மணல் கடத்தும் சமூக விரோதிகளோ நூற்றுக்கணக்கான டிப்பர்களை வைத்து களிமண்ணை எடுத்து செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்தும் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். சட்ட விரோதமாக அள்ளிய களிமண்ணை செங்கற் சூளைகளில் டன் கணக்கில் குவித்து வருகின்றனர். இரவில் நடக்கும் களிமண் கொள்ளையை போலீசார் மாமூல் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இந்த மண் மற்றும் மணல் கொள்ளையை கட்சிபேதமின்றி அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆதாரங்களோடு பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் அதை தட்டி கழிப்பதாக கூறப்படுகிறது.
 

click me!