
ஓ.பி.எஸ் அணிக்கு தேர்தல் நிதி கொடுக்க வந்த மணல் வியாபாரி ஒருவர், விஜயபாஸ்கருக்கும் கொடுத்ததாக உளறியதே, வருமான வரி சோதனைக்கு மூல காரணம் என்று சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டை பகுதியில் மணல் வணிகத்தில் கொடிகட்டி பறப்பவர் ராமச்சந்திரன் என்பவர். சேகர் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளியான இவர், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களை பகைத்துக் கொள்ளாமல் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, முக்கிய கட்சிகள் சிலவற்றுக்கு தேர்தல் நிதி கொடுக்கலாம் என்று முடிவு செய்து, தினகரனை சந்தித்துள்ளார்.
அவரோ, தேர்தல் வரவுகளை எல்லாம் விஜயபாஸ்கர்தான் பார்க்கிறார், நீங்கள் அவரிடமே கொண்டு பொய் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். அதன்படி, விஜயபாஸ்கரை சந்தித்து, நிதியை கொடுத்துள்ளார் அவர்.
அதன் பின்னர் மற்றொரு முக்கிய கட்சியின் தலைவரையும் சந்தித்து, அவருக்கும் தேர்தல் நிதியை கொடுத்துள்ளார்.
கடைசியாக, பன்னீர்செல்வத்தை சந்தித்து, ராமச்சந்திரன் தேர்தல் நிதி கொடுக்கும்போது, அவரும் மாபா பாண்டியராஜனிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்.
அவர் சொன்னதுபோலவே, பாண்டியராஜனிடம் கொண்டு போய் தேர்தல் நிதியை கொடுத்துள்ளார். நிதி கொடுத்த மனிதர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், யார் யாருக்கு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார் என்பதையும் வெள்ளந்தியாக சொல்லிவிட்டு போய் விட்டார்.
மணல் ராமச்சந்திரன் சொன்னதை அப்படியே, ஓ.பி.ஸிடம், பாண்டியராஜன் போட்டுக் கொடுக்க, ஓ.பி.எஸ், அதை வருமான வரி அதிகாரிகளிடம் ரகசியமாக சொல்லி, ரூட் போட்டு கொடுக்க, திட்டமிட்டபடி அரங்கேறி இருக்கிறது வருமானவரித்துறை சோதனை.
பாவி மனுஷன் இப்படி உளறி கொட்டி, கதையையே கந்தல் பண்ணிவிட்டு போய்விட்டாரே என்று புலம்புகிறாராம் தினகரன்.