பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரே நாடு மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே வரி, என்ற வரிசையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சித்து வருகிறது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் சர்வ அதிகாரம் படைத்த நபராக பிரதமரை உருவாக்கவும், இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வரவும் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பாஜக அரசு மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த சூழலில் பிரதமர் மோடி தனது 73-வது பிறந்தநாளை நாளை (செப்.17) கொண்டாட உள்ளார். இதனை நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழக பாஜகவினரும் மோடி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
நானே பெரிய ரௌடி தான் . . . வெட்டிட்டு பொயிட்டே இருப்பேன் - சீமான் ஆவேசம்
இந்த நிலையில் பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் இந்து முன்னணியை சேர்ந்த அழகர்சாமி இந்த போஸ்டரை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் “ ஊழல் திராவிடத்தை விரட்டி தமிழகத்திலும் சனாதன ஆட்சியை மலர செய்யும் அகண்ட பாரத்தின் அதிபரே.. உம்மை வணங்குகிறோம்” என்று அச்சிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அதிபராக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அதற்கு எதிர்வினையாற்றினர். உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில் தற்போது தான் அந்த சர்ச்சை ஓய்ந்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் சனாதான ஆட்சி மலரும் என்று இந்து முன்னணி சார்பில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.