சென்னை சைதாப்பேட்டை களநிலவரம்..! உற்சாகத்தில் சைதை துரைசாமி..! டென்சனில் திமுக..!

By Selva KathirFirst Published Apr 4, 2021, 10:43 AM IST
Highlights

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களும், இளைஞர்களும், இளம் பெண்களும் கொடுக்கும் ஆதரவால் உற்சாகமாக இருந்து வருகிறது சைதை துரைசாமி தரப்பு.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களும், இளைஞர்களும், இளம் பெண்களும் கொடுக்கும் ஆதரவால் உற்சாகமாக இருந்து வருகிறது சைதை துரைசாமி தரப்பு.

சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ள நிலையில் கொளத்தூருக்கு பிறகு சென்னையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதியாக சைதாப்பேட்டை நிலவி வருகிறது. இதற்கு காரணம் சென்னையில் இதற்கு முன்பு மேயர்களாக இருந்த இரண்டு பேர் நேருக்கு நேராக மோதுவது தான். அதிலும் சிட்டிங் எம்எல்ஏ மா.சுப்ரமணியம் இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்று திமுக தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம்பெறும் கனவுடன் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார். இதே போல் அதிமுக தரப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அதனை தக்க வைத்து வெற்றி வாகை சூடும் வியூகத்துடன் சைதை துரைசாமி  இயங்கி வருகிறார்.

சைதாப்பேட்டை தொகுதியை பொறுத்தவரை சைதை துரைசாமியை தெரியாதவர்களே இல்லை எனலாம். அந்த தொகுதி முழுவதும் தனக்கென்று தனி செல்வாக்கை அவர் உருவாக்கி வைத்துள்ளார். தனது 40 வருட கால கல்விச் சேவையில் சுமார் 30ஆயிரம் பேரை ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அரசுப் பணியாளர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் மாற்றியவர் என்கிற இமேஜ் சைதை துரைசாமியை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தி வைத்துள்ளது. அத்தோடு சென்னையில் சைதை துரைசாமி மேயராகஇருந்த போது தான் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெயலலிதாவிடம் அம்மா உணவகம் தொடர்பான யோசனையை கூறி அதற்கு செயல்வடிவம் கொடுத்தவரும் சைதை துரைசாமி தான். தற்போது இந்த திட்டத்தை வேறு வேறு பெயர்களில் மற்ற மாநில அரசுகளும்  மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் செயல்படுத்த துவங்கியுள்ளனர். இதுவே சைதை துரைசாமியின் தொலைநோக்கு பார்வை மற்றும் சிறப்பான நிர்வாகத்திற்கு சான்றாகிறது. இது தவிர கொரோனா கால கட்டத்தில் வீடுகளுக்குள் முடங்கியிருந்தவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் சைதை துரைசாமி தினசரி உணவு வழங்கி வந்தது சைதாப்பேட்டை தொகுதி முழுவதும்  நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கம், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் சுமூக உறவு என அரசியல் ரீதியாகவும் சைதை துரைசாமி பலம் வாய்ந்தவராக உள்ளார். இதனால் சைதாப்பேட்டையில் அவரை வெற்றி பெற வைக்க அதிமுகவினர் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றனர். இதே தேர்தல் பணிகளுக்கு என்று இளம் தலைமுறையை சேர்ந்தவர்களை வைத்து சைதை துரைசாமி மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தொகுதியில் நன்றாக எடுபடுகிறது. மேலும சைதாப்பேட்டை தொகுதிக்கு தான் செய்ய இருக்கும் திட்டங்கள் என்று அவர் பட்டியலிட்டுள்ள விவரங்களும் தொகுதியில் நன்றாக ரீச் ஆகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2011 மேயர் தேர்தலின் போது திமுகவின் மா சுப்ரமணியத்தை எதிர்கொண்டு வீழ்த்திய அனுபவம் சைதை துரைசாமிக்கு உள்ளது. அதிலும் இந்தியாவில் வேறு எந்த மேயரும் பெறாத வகையில் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்சுப்ரமணியத்தை வீழ்த்தி அதிமுகவின் முதல் சென்னை மேயர் என்கிற பெருமையை துரைசாமி பெற்று இருந்தார். அப்போது சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் மா.சுப்ரமணியத்தை விட சுமார் 30ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார் துரைசாமி. மேலும் சுப்ரமணியம் வசிக்கும் தெருவில் கூட அதிக வாக்குகளை துரைசாமி வாங்கியிருந்தார்.

இப்படி சாதகமான அம்சங்களுடன் சைதை துரைசாமி தொகுதிக்குள் வலம் வரும் நிலையில் திமு கவேட்பாளர் மா.சுப்ரமணியம் தொழிலாளர் ஒருவரின் நிலத்தை அபகரித்துவிட்டார் என்று நடைபெற்று வரும் வழக்கு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சைதாப்பேட்டையில் அதிமுகவினர் உற்சாகமாகவும் திமுகவினர் சோகத்துடனும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

click me!