தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு..? ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு

By karthikeyan VFirst Published Jan 16, 2021, 7:19 PM IST
Highlights

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்று ஒருவர் சத்குருவிடம் கேட்க, அதற்கு ஐந்து நிபந்தனைகளை விதிக்கும் சத்குரு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே தனது ஓட்டு என்று பதிலளித்தார்.
 

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா நேற்று (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறினர்.

ஈஷாவில் வளர்க்கப்படும் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன. ஈஷாவில் அழிந்து வரும் 23 நாட்டு மாடு இனங்கள் பராமரிக்கப்பட்டு வளர்த்து வரப்படுகிறது. பொங்கலிடுதலை தொடர்ந்தது கலை நிகழ்ச்சிகளும் சத்குருவின் சிறப்பு சத்சங்கமும் நடைபெற்றது. தேவார பாடல்களுடன் துவங்கிய கலை நிகழ்சிகளில் பாரம்பரிய நாட்டுபுற தமிழ் பாடல்களும் நடனங்களும் இடம் பெற்றன.

அதன்பின்னர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சத்குரு. அப்போது, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்று குழப்பமாக இருக்கிறது. எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்று தெளிவுபடுத்துங்கள் என்று இளைஞர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சத்குரு, நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று என்னால் சொல்ல முடியாது. நான் எந்த கட்சிக்கு என் ஓட்டை போடுவேன் என்று சொல்கிறேன். நான் எந்த கட்சியையும் சார்ந்த நபர் அல்ல. எனக்கு ஐந்து நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கு என் ஓட்டு.

முதல் நிபந்தனை:

தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் தமிழ் நீருக்கும் உயிர்நாடியாக இருப்பது காவிரி ஆறு. காவிரி ஆற்றில் மழை அதிகம் பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் பிரச்னை. தமிழ்நாட்டிற்கு காவிரி ஆறு நடந்துவந்தால் வளம்; ஓடிவந்தால் வெள்ளம். காவிரி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடினால் எந்த பிரச்னையும் இல்லை. அதை உறுதி செய்ய ஒரு வழி இருக்கிறது. காவிரி ஆற்று நீரை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களும் பகிர்ந்துகொள்ளும் நிலையில், காவிரி உருவாகும் தலக்காவிரி முதல் கடலில் கலப்பது வரை, ஆண்டு முழுவதும் காவிரியில் நீர் ஓட என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய, 3 மாநிலங்களும் இணைந்து ஒரு சைண்டிஃபிக் கமிட்டியை அமைத்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இதை செய்ய ஆறு மாதங்கள் போதுமானது. ஒரு மாநிலத்தால் மட்டும் காவிரி விவகாரத்தை தீர்க்க முடியாது. எனவே 3 மாநிலங்களும் இணைந்துதான் இதை செய்ய வேண்டும். 3 மாநிலங்களும் இணைந்து காவிரியில் ஆண்டு முழுவதும் நீர் ஓடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சைண்டிஃபிக் கமிட்டி அமைத்து, ஆராய்ந்து ஆறு மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக எந்த கட்சி உறுதியளிக்கிறதோ அந்த கட்சிக்குத்தான் எனது(சத்குரு) ஓட்டு.

2வது நிபந்தனை:

விவசாய விளைபொருட்களை மாநிலங்களின் எல்லை கடந்து எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் விற்பனை செய்வதற்கான உரிமையை வழங்க வேண்டும்.

3வது நிபந்தனை:

மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும். அந்த பயிற்சி மையம் எளிதான முறையில், ஊழல் இல்லாத ஒரு வாசல் மூலமாக அமைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்தவொரு நல்ல விஷயத்தை தொடங்க வேண்டும் என்றாலும், குறைந்தது 10 இடங்களில் ”நோ அப்ஜக்‌ஷன்” சர்டிஃபிகேட் வாங்கவேண்டியுள்ளது. நல்லது செய்வதற்கு எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள்? 10 “நோ அப்ஜக்‌ஷன்” வாங்க ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம். எனவே இந்த ஊழல் எல்லாம் இல்லாமல், ஒருவாசல் வழியாக முதலீடுகளும் திறமையும் வர வேண்டும். அதற்கு உறுதியளிக்கும் கட்சிக்குத்தான் எனது(சத்குரு) ஓட்டு.

4வது நிபந்தனை:

கல்வியை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கிவிடலாம். அரசு பள்ளிகளே தேவையில்லை. ஏனெனில் நிறைய பள்ளிகள் மாட்டுப்பண்ணை மாதிரி இருக்கின்றன. அரசு பள்ளிகளின் நோக்கமே, வசதியில்லாத ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களிடமே கல்வியை ஒப்படைத்துவிட்டு, ஏழை மாணவர்களுக்கு அரசே, அந்த பள்ளிகளில் படிக்க கட்டணத்தை செலுத்தலாம். அரசு பள்ளிகளை இயக்குவதற்கு பதிலாக, ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்துவது எவ்வளவோ மேல். எனவே இதற்கான உறுதியளிக்க வேண்டும்.

5வது நிபந்தனை: 

தமிழ்நாட்டில் கோவில்களின் நிர்வாகம் அரசிடம் உள்ளது. கோவில்கள் ஆன்மீக வளர்ச்சிக்காக கட்டப்பட்ட ஆன்மீக மையங்கள். ஆனால் காலப்போக்கில் கோவில்கள் பிரார்த்தனை ஆலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன. எனவே சம்பிரதாய முறைகளை மீண்டும் கொண்டுவந்து ஆன்மீக மையமாக மாற்ற வேண்டும்.

மேற்கூறிய எனது ஐந்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் கட்சிக்குத்தான் என் ஓட்டு. அதேபோல மக்கள் அனைவருமே தங்களது ஐந்து நிபந்தனைகளை விதிக்க வேண்டும். அவற்றை நிறைவேற்றும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார் சத்குரு.
 

click me!