சச்சின் டெண்டுல்கருக்கு ஓ..போடும் பெரம்பலூர் மக்கள் …. சாலை அமைக்க நிதி ஒதுக்கிய லிட்டில் மாஸ்டர்!!

First Published Jul 1, 2018, 11:59 PM IST
Highlights
sachin tentoolkar allot 22 lakhs road fund to perambalur


பெரம்பலூர் மாவட்டம் எழும்பலூர் கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ. 21.70 லட்சம் நிதியுதவியை முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊரகப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மக்களவை மற்றும்  மாநிலங்களவை எம்பிக்கள் யார் வேண்டுமானாலும், நாட்டின் எந்தப்பகுதி கிராமத்துக்கும் நகரத்துக்கும் நிதி உதவி வழங்கலாம்.

இந்நிலையில் லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மாநிலங்கள் அவை எம்பி பதவி கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. அதற்கு சில  நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எழும்பலூர் கிராமத்தில் 500 மீட்டருக்கு சாலை அமைக்க சச்சின் டெண்டுல்கர்  நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 22 லட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கித் தந்துள்ளார்.

இது எப்படி சாத்தியமாயிற்று என  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நிருபர்களிடம் ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவர்,  தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் நாஸிக் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்டம், எலம்பலூர் கிராமத்துக்கு சாலை அமைக்க நிதியுதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தனது பதவிக்காலம் முடியும் முன், சாலை அமைப்பதற்கான செலவு, திட்டத்தை உடனே அனுப்பக் கோரினார். இதற்காக உடனடியாக திட்டமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.22 லட்சம் கோரப்பட்டது.

இதையடுத்து தனது பதவிக்காலம் முடியும் முன், எலம்பலூர் கிராமத்துக்கு சாலை அமைக்க சச்சின் ரூ.21.70 லட்சம் நிதி ஒதுக்கினார். இப்போது, மாவட்ட நிர்வாகத்துக்கு சச்சினின் எம்.பி நிதியில் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது.

தற்போது சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அடுத்த 75 நாட்களுக்குள் சாலை முற்றிலுமாக அமைக்கப்பட்டுவிடும். எலம்பலூர் கிராமத்தில் 500 மீட்டர் தொலைவுக்கும், 3.75 மீட்டர் அகலத்திலும், 20 செ.மீ உயரத்திலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து எலம்பலூர் கிராம மக்கள்  கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டல்கருக்கு  பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

click me!