எலியும் பூனையுமாக செயல்பட்டு வந்த கனிமொழி – சபரீசன் தரப்பு தற்போது ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எலியும் பூனையுமாக செயல்பட்டு வந்த கனிமொழி – சபரீசன் தரப்பு தற்போது ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கை கனிமொழி, மருமகன் சபரீசன். கலைஞர் இருந்த வரை திமுகவின் டெல்லி முகமாக இருந்தவர் கனிமொழி. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு திமுகவின் டெல்லி முகம் யார் என்கிற போட்டியில் சபரீசன் வெற்றி பெற்றார். கனிமொழி மக்களவை எம்பியான போதும் கூட அவரை நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவராகவே ஸ்டாலின் நியமித்தார். அதே சமயம் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்புக் கொள்ள வைத்ததில் சபரீசனுக்கு மிக மிக முக்கிய பங்கு உண்டு.
கடந்த 2015ம் ஆண்டு முதலே பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக்க திமுக முயற்சி மேற்கொண்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் மீது ஈர்ப்பு இல்லாத பிரசாந்த் கிஷோர் அதற்கு பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தார். இதன் பிறகு தான் ஓஎம்ஜி எனும் நிறுவனம் மூலம் சுனில் என்பவர் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளரானார். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரை ஒதுக்கி பிரசாந்த் கிஷோரை உள்ளே இழுத்துக் கொண்டது திமுக மேலிடம். தற்போது திமுக பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் வகுத்துக் கொடுக்கும் திட்டங்களின் அடிப்படையில் தான் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
கூட்டணி விஷயத்தை சபரீசன் கவனித்துக் கொள்வதாக சொல்கிறார்கள். டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்துடன் சபரீசனுக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சோனியா காந்தியை சென்னை அழைத்து வந்து கலைஞர் சிலையை திறக்க வைத்தவர் சபரீசன். அதே நிகழ்ச்சியில் தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் மு.க.ஸ்டாலின். இப்படி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சபரீசனின் சில விஷயங்கள் தேசிய அளவில் விவாதப் பொருளாகின. அதே சமயம் கனிமொழி வெறும் எம்பி பதவியை தக்க வைத்துக் கொள்ள போராடி வந்தார்.
இதற்கிடையே உதயநிதியும் அரசியல் களத்திற்கு வந்ததால் கனிமொழி திமுகவில் ஓரம்கட்டப்படுவார் என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் அண்மையில் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி அவருக்கான முக்கியத்துவத்தை ஸ்டாலின் உணர்த்தினார். இப்படி திமுகவில் கனிமொழி – சபரீசன் – உதயநிதி என அதிகாரப்போட்டியில் இருந்தாலும், சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச, சபரீசன் டெல்லி சென்றுள்ளார்.
இது தொடர்பாக முக்கிய நபர் ஒருவரை சந்திக்கும் முன்பாக கனிமொழியை அவரது வீட்டிற்கு சென்று சபரீசன் சந்தித்துள்ளார். அதாவது சித்தி முறை வரும் கனிமொழியை சபரீசன் நேரில் சென்று சந்தித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் திமுகவின் டெல்லி முகம் யார் என்பதில் கனிமொழி – சபரீசன் இடையே பனிப்போர் நீடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கூட்டணி தொடர்பாக சபரீசன் பேச இருந்த முக்கிய நபர், கனிமொழிக்கு நல்ல பழக்கம் என்று கூறுகிறார்கள். அதனால் தான் கனிமொழியை சந்தித்து அவர் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு சபரீசன் புறப்பட்டதாக சொல்கிறார்கள்.
அதே சமயம் சபரீசன் கேட்காத பல்வேறு தகவல்களை கொடுத்ததுடன் அந்த முக்கிய புள்ளி எந்த விஷயத்தில் வீக் என்பதையும் கனிமொழி எக்ஸ்ட்ரா தகவலாக கூறியதாக சொல்கிறார்கள். இதன் மூலம் சபரீசன் – கனிமொழி இடையிலான பனிப்போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதும், திமுக வெற்றிக்காக இருவரும் தற்காலிகமாக ஒன்று சேர்ந்திருப்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.