சக்ஸஸோடு திரும்பிவந்து சபாஷ் வாங்கிய சபரீசன்... மருமகனால் ஹேப்பியான ஸ்டாலின்!

By sathish kFirst Published Nov 30, 2018, 10:28 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஒப்புக் கொண்டதன் பின்னனியில் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் விடா முயற்சி இருந்தது தெரியவந்துள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் ஏற்கனவே இருந்த அண்ணா சிலைக்கு அருகே கலைஞருக்கு ஆள் உயர வெண்கலை சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை சென்னை அருகே உள்ள மீஞ்சூரில் தயாராகி வருகிறது. கலைஞர் மறைந்ததன் 100வது நாளில் அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலையை திறந்து வைத்து விட வேண்டும் என்பதில் ஸ்டாலின் மிகத் தீவிரமாக இருந்தார்.

ஆனால் கலைஞர் சிலையை யார் திறந்து வைப்பது என்று முடிவெடுப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சிலை திறப்பு தள்ளிப்போயுள்ளது. இந்த நிலையில் வரும் 16ந் தேதி திறக்கப்படும் என்று தி.மு.க அறிவித்தது. ஆனால் சிலையை யார் திறக்கப்போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது- ஏனென்றால் சிலை திறப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க சிலை திறப்பாளர் குறித்த அறிக்கையை வெளியிடவில்லை.

இதனிடைய தேசிய அளவில் மிகப்பெரிய தலைவராக உள்ள ஒருவர் தான் கலைஞர் சிலையை திறக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்தாலும் அவர் அரசியலில் ஜூனியர் என்பதால் அவர் கலைஞர் சிலையை திறப்பது நன்றாக இருக்காது என்று தி.மு.கவினர் சிந்தித்தனர். இதனை தொடர்ந்து தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அழைத்து வந்து கலைஞர் சிலையை திறக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்தார்.

ஆனால் சோனியா காந்தி பொறுப்புகள் அனைத்தையும் ராகுலிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். மேலும் அவர் அரசியல் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்கிற முடிவிலும் உறுதியாக இருந்தார். இதற்கு காரணம் சோனியாவின் உடல் நிலை ஆகும். இந்த நிலையில் தான் இந்த மாத தொடக்கத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லி சென்று இருந்தார்.

சுமார் ஒரு வாரம் வரை டெல்லியில் இருந்த சபரீசன் முதலில் ராகுல் காந்தியையும் பிறகு சோனியா காந்தியையும் சந்தித்து சிலை திறப்பிற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். பின்னர் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் சபரீசனிடம் சோனியா வருகை குறித்து எந்த உறுதியும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் அண்மையில் தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து உடனடியாக காங்கிரஸ் மேலிடத்தை தொடர்பு கொண்ட சபரீசன், தெலுங்கனாவிற்கு சோனியா காந்தி வரும் போது கலைஞர் சிலை திறப்பிற்கும் வந்தால் தான் நன்றாக இருக்கும் என்று பாய்ன்ட் பிடித்து பேசியுள்ளார். மேலும் கலைஞர் மறைவின் போது சோனியா சென்னை வராததையும் சபரீசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் என்பவர் மூலமாக அகமது படேலை கொண்டு சோனியாவின் டேட்டை சபரீசன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கலைஞர் நினைவேந்தலுக்கு அமித் ஷாவை வரவழைப்பதாக கூறிவிட்டு டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய சபரீசன் சோனியா காந்தி மூலம் தனது செல்வாக்கை ஸ்டாலினிடம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
 

click me!