
ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்; அப்படி இல்லை என்றால் 3 லட்சம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கருத்து கேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய - மாநில அரசுகள், நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டதாக கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
மக்களுக்கு பயன்படாத எம்.எல்.ஏ. பதவி எனக்கு தேவையில்லை. தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றாலும், செல்லாது என்றாலும் அரசுக்கு நெருக்கடிதான். ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்காமல் நீதிபதிகள் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கி விட்டனர். இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளது வழக்கை காலம் தாழ்த்தும் முயற்சியாகவே உள்ளது என்றார்.
மூன்றாவது நீதிபதியை எப்போது நியமிப்பார்கள்... இறுதி தீர்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது. எனவே வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். எனது முடிவை டிடிவி தினகரனிடமும் சொல்லிவிட்டேன். அதனை அவரும் ஏற்றுக் கொண்டார் என்றும் கூறினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் வரவேற்கிறேன்... பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தங்க தமிழ்செல்வன், எங்களின் முதல் கோரிக்கையே முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி தாய் கழகத்தில் இணைவோம்? என்று கேள்வி எழுப்பினார்.
18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்த பிறகும் நாங்கள் ஏன் அதிமுகவில் இணைய வேண்டும்? என்றும் நாட்டில் ஜனநாயகம் 100 சதவிகிதம் இல்லை என்றும் கூறினார்.
17 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி, வழக்கு பற்றி முடிவு எடுக்கப்படும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும். ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும், கட்சி மாறி நாங்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்றும் கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து யாரும் விலகவில்லை என்றும் தங்க தமிழ்செல்வன் கூறினார்.