
ரஜினி மற்றும் கமலின் அரசியல் ஆட்டத்தை அடியோடு தீர்த்துக்கட்டவும், அடுத்ததாக ஆட்சிகட்டிலில் அமரவும், விஜய்க்கு இருக்கும் ரசிகர்களின் பலத்தை அப்படியே வாக்குகளாக மாற்ற விஜயை திமுகவில் இழுக்க காய் நகர்த்தி வருகிறதாம் திமுக தலைமை.
கமல், 'மக்கள் நீதி மையம்' என்ற பெயரில், தனிக்கட்சி துவக்கியுள்ளார். நடிகர் ரஜினியும், மக்கள் மன்றத்தை துவக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். விரைவில் அவரும், புதிய கட்சி துவக்க உள்ளார். இருவரின் அரசியல் வருகையால், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஓட்டுகள், சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கமல் இளைஞர்களை வளைக்கும் விதமாக பேசி வருகிறார். இது முழுமையாக திமுகவை பதிக்கும் திமுக தலைமைக்கு சொல்லப்பட்டதாம். இதனால், விஜய்யிடம் பேசியிருக்கிறார்கள்.
கடந்த காலங்களில், விஜய்யின் அப்பா சந்திரசேகர், கருணாநிதியுடன் நட்பில் இருந்தவர். விஜய்யும், கருணாநிதி குடும்பத்தினருடன் நல்ல தொடர்பில் இருந்தார். அதனால் தான் உதயநிதியின் முதல் தயாரிப்பான குருவியில் நடித்தார். அதேபோல கலாநிதி மாறன் தயாரிப்பில் நடித்தார். பிறகு காவலன் படத்தின் பொது ஏற்பட்ட சில பிரச்சனையால் விஜய் தரப்பினர், ஜெயலலிதா ஆதரவாக 2011 தேர்தலில் விஜய் ரசிகர்கள் இறங்கினர்.
இதனையடுத்து, விஜய்யின், தலைவா படத்தின்போது “டைம் டூ லீட்“ என கேப்ஷன் இருந்ததால் படத்தை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்ட போது, அதற்கு உதவும்படி கோர, விஜய்யும், சந்திரசேகரும், முதல்வர் ஜெ.,வை சந்திக்க முயன்றனர் ஆனால், ஜெ., கைவிரித்தார். இதனால் விஜய் தரப்பு, ஜெ., மீது கோபம் அடைந்தது. இதனையடுத்து 2016 சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில், விஜய் ரசிகர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதற்கேற்ற வகையில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான, “மெர்சல்” படத்தில், மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பு, 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் போன்றவற்றைவிமர்சிக்கும் வகையில், காட்சிகள் இருந்தன. எனவே, படத்தை கண்டித்து, பிஜேபியினர் போராட்டம் என்ற பெயரில் இலவசமாக விளம்பரம் செய்தனர். பிஜேபி செய்த இந்த அலப்பறைக்கு விஜய்க்கு ஆதரவாக எதிர்கட்சிகள் இருந்தது.
துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமானது. இதில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து, ரஜினி ஆறுதல் கூறினார். 'கலவரத்திற்கு, சமூக விரோதிகளே காரணம்' என, ரஜினி பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது, இதனால் இளைஞர்களின் கோபத்திற்கு உள்ளானார் ரஜினி. மீதமிருக்கும் ரஜினியின் செல்வாக்கை விஜயை வைத்து தவிடு பொடியாக்க திமுக திட்டம் போட்டுள்ளதாம்.
இதனையடுத்து ரஜினி, கமல் கட்சிகளால், பொதுமக்களின் ஓட்டுகள், இளைஞர்கள் மற்றும் புது வாக்காளர்களின் ஓட்டுகள் சிதறுவதை தடுக்கவும், இளைஞர்களின் ஓட்டுகளை கவரவும், தி.மு.க., புதிய வியூகம் வகுத்துள்ளது. இதன்படி, விஜய் தலைமையிலான மக்கள் இயக்கத்தை, தி.மு.க., கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சு நடத்த, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. விஜய்க்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியும், அவரின் ரசிகர்களுக்கு, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' திமுக காய் நகர்த்தி வருகிறதாம்.