இடிந்து விழுந்த இந்து கோயில்.. பதறிய அன்சாரி.. அமைச்சரிடம் பேசி புனரமைக்க ஏற்பாடு, மங்காத மத நல்லிணக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 5, 2020, 2:53 PM IST
Highlights

உடனே இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி, தனது ஊரில் உள்ள கோயில் என்பதை அவரிடம் எடுத்துக் கூறி, உடனடியாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தோப்புத்துறையில் மழையால் இடிந்து விழுந்த இந்து கோயிலை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமாக தமிமுன் அன்சாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

தொடர் மரையால் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மாரி அம்மன் கோயில் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின்சொந்த ஊரும் அது தான். 

இது குறித்து செய்தியறிந்ததும் மஜக பேரிடர் மீட்பு குழுவினருடன் அங்கு சென்று இடிந்து விழுந்த கோயிலை பார்வையிட்டார்.அப்போது  இந்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சிவகுமார் அவரை வரவேற்று கோயிலில் பாரம்பர்யம் குறித்து விளக்கினார். உடனே இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி, தனது ஊரில் உள்ள கோயில் என்பதை அவரிடம் எடுத்துக் கூறி, உடனடியாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நெகிழ்ந்து போன அமைச்சர் உடனே அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக கூறினார். அங்கு நின்றிருந்த பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோப்புத்துறை என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு ஊராகும். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இவ்வூருக்கு வந்து இங்கு நிலவும் ஒற்றுமையை பார்த்து விட்டு இது தமிழ்நாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் ஊர் என பாராட்டி விட்டு சென்றது குறிப்பிடதக்கது. அதற்கேற்ப இடிந்த இந்து கோயிலை தமிமுன் அன்சாரி பார்வையிட்டு அதை புனரமைக்க நடவடிக்கை எடுத்து, தான் அனைத்து சமூகத்துக்குமான சட்டமன்ற உறுப்பினர் என்பதை நிலைநாட்டியுள்ளார். எத்தனை பிரிவினைவாதிகள் சதி செய்தாலும் இந்து இஸ்லாமிய மக்களை யாரும் பிரிக்க முடியாது என அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் அன்சாரியை பாராட்டினர். 

click me!