காசியின் பெருமையை பறைசாற்றும் ருத்ராக்ஷ் சர்வதேச மையம்.. இந்த ஒரு கட்டிடத்திற்கு இத்தனை சிறப்புகளா..?

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 4:17 PM IST
Highlights

மக்களிடையே சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான நோக்கமாகவே இந்த வாரணாசி சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காசி நகரம் என்பது சிவபெருமானின் திருத்தலம் அமைந்துள்ள ஆன்மீக பூமி, ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் குறியீடு,

வாரணாசியின் புதிய அடையாளமாக பரிணமித்துள்ளது ருத்ராக்ஷ் என்ற சர்வதேச  ஒத்துழைப்பு, மாநாட்டு மையம். இந்த மையம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.பல்வேறு தனி சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த மையம், கலாச்சார பழமை மிகுந்த நகரமான வாரணாசியில் புதிய அடையாளங்களில் ஒன்றாக பரிணமித்துள்ளதுடன், இது முழுக்க முழுக்க ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. 

அதாவது, இந்தியா- ஜப்பான் மக்களுக்கு இடையே நீடித்த கலாச்சார உறவு இருந்து வருகிறது, அதைவிட இருநாடுகளும் ஜனநாயகத்தின் மீது அதீதநம்பிக்கை கொண்டவைகளாகும். பல விஷயங்களில் ஒத்த சிந்தனை கொண்டவர்களாக இரு நாட்டு மக்களும் இருந்து வருகின்றனர். ஒத்த திசையில் பயணிக்கும் இருநாடுகளும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருகின்றன. அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி ஜப்பானுக்கும், ஜப்பான் நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு இருநாட்டு உறவுகளையும் புதுப்பித்து வருகின்றனர்.

அதேபோன்று இருநாடுகளின் கலாச்சாரமும் பலவகைகளில் ஒத்ததாக இருக்கிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையேயான கலை, கலாச்சாரம் சமூக தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஆன்மீக பூமியான பண்டைய நகரங்களில் ஒன்றான வாரணாசியில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் வகையிலும், இரு நாட்டின் கலாச்சாரங்களை பரஸ்பரம் மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 

வாரணாசியின் ஆடம்பரமான சிக்ரா பகுதியில் அமைந்துள்ள 2.87 ஹெக்டர் நிலப் பரப்பளவில் இரண்டு மாடி கொண்டதாக மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் பரந்து விரிந்த  வரவேற்பு அறையை கொண்டுள்ளது. எந்நேரமும் சுமார் 1200 பேர் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் மாநாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் மையத்தின் கேலரி வாரணாசியின் கலை கலாச்சாரம் மற்றும் இசையை சித்தரிக்கும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாநாட்டு கட்டிடம் போதுமான பாதுகாப்பு  அம்சங்களை கொண்டுள்ளது. இதற்குப் பிரதான மூன்று நுழைவாயில்கள் உள்ளன, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் ஒரு நுழைவாயிலும், சேவைக்கான மற்றொரு நுழைவாயிலும், மற்றும் தனி விஐபிகள் வந்து செல்வதற்கான நுழைவாயில் என மூன்று நுழைவாயில்கள் அமைந்துள்ளன.மக்களிடையே சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான நோக்கமாகவே இந்த வாரணாசி சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

காசி நகரம் என்பது சிவபெருமானின் திருத்தலம் அமைந்துள்ள ஆன்மீக பூமி, ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் குறியீடு, அது மனிதநேயத்தை வலியுறுத்தும் அடையாளம், எனவே அதை குறிக்கும் வகையில் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு ருத்ராக்ஷம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கோபுரம் சிவலிங்கத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, அதைச் சுற்றிலும் 108 ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி இந்த ருத்ராக்ஷம் என்ற சர்வதேச மையம், வாரணாசியின் புதிய அடையாளமாக திகழும் என்பது மட்டுமல்ல, இந்த மையம் இந்தியா- ஜப்பான் நட்பின் அடையாளமாகவும், காசியின் பெருமையையும் பறைசாற்றி நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. 
 

click me!