ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஆர்.எஸ். பாரதி உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து இருப்பதாவும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று கட்சியினருக்கு வாய்ப்பு
திமுகவில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், புதிதாக அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே மாவட்ட செயலாளர்,எம்எல்ஏ, அமைச்சர் என பதவிகள் வாரி வழங்கப்படுவதாக திமுக முன்னோடிகள் தொடர்ந்து மறைமுகமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் திமுகவில் மூத்தவர்களுக்கு சீட் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைப்பு செயலாளராக இருந்த ஆர்.எஸ் பாரதி நீண்ட நாட்களுக்கு 63வது வயதில் தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. அவரது பதவி காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என ஆர்.எஸ் பாரதி எதிர்பார்த்த நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இப்போ லிப்டில் போனால் கூட பாதுகாப்பு இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சீண்டும் தமிழிசை..!
உழைக்காதவர்களுக்கு சீட்
இந்தநிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னா படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார். அப்போது எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
விசுவாசமாக இருந்தால் பதவி
மூத்த முன்னோடியான ஜின்னா திமுகவின் சோதனை கால கட்டத்தில் உடன் பயணித்தவர், எப்போது எல்லாம் கழகத்திற்கு பிரச்சனை வந்ததோ அப்போது எல்லாம் அறிவாலயத்தில் இருப்பார் என கூறினார். ஜின்னாவிற்கு பதவி வழங்குவது தொடர்பாக தொடர்ந்து திமுக தலைவரின் கவனத்திற்கு பல முறை பட்டியல் சென்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் அது கடைசி நேரத்தில் தட்டி போய் விடும். இறுதியாக 2006 ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஜின்னாவிற்கு எம்பி சீட் வழங்கியதாகவும் தெரிவித்தார். அதேபோன்றுதான் எனக்கு 63 வயதில் பதவி கிடைத்தது. திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் பதவி தேடிவரும் அதற்கு நானே உதாரணம் என ஆர்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக-வில் இருந்து விலகினார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்