உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆர்.எஸ் பாரதிக்கு இடைகால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வ குமார் உத்தரவிட்டுள்ளார்
திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாரதி. மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது தலித் மக்கள் தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று கூறியிருந்தார்.
undefined
அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஆலந்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதனிடையே அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவரது பேச்சு குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதி கூறியிருக்கிறார். இதையடுத்து அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ் பாரதி தற்போது விடுதலை ஆகி இருக்கிறார்.