தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்ற பணி செய்த காவலர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.. முதல்வர் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Jun 18, 2021, 3:44 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். 

கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 58 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல் துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறை பணியாளர்கள், தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

click me!