
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிவாரண உதவிக்கு தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.256 கோடி நிதி கேட்டுள்ளதாகவும், சென்னை வந்துள்ள மத்திய குழு, டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள், ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு, இன்று சென்னை வந்துள்ளது. இந்த குழுவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இந்த குழு, முதலில் எந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும் என்பதும், எத்தனை நாட்கள் தங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிவாரண உதவிக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.256 கோடி நிதி கேட்டுள்ளதாக தெரிவித்தார். டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள், ஆலோசனைகளை மத்திய குழு வழங்கியுள்ளதாக கூறினார். தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் 2 - 3 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
டெங்கு பல்வேறு இடங்களை பாதித்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள ரூ.256 கோடி நிதி போதுமா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.